கரூர்: கரூரில் கடந்த செப்டம்பர் 27ம்தேதி நடந்த விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய மூத்த ஆலோசகர் அனுஜ்திவாரி தலைமையிலான 3 பேர் கொண்ட சிறப்பு குழுவினர், நேற்றுமுன்தினம் கரூர் ஆர்டிஓ முகமது பைசல், மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் கலைவாணி உள்பட 24 பேரிடம் தனித்தனியாக விசாரித்தனர்.இந்த நிலையில் இந்த சம்பவத்தில் பலியான 10 பேர் குடும்பத்தினர் நேற்று காலை 10 மணியளவில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய சிறப்பு குழு முன்பு தனித்தனியாக ஆஜராகினர்.
இவர்களிடம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை விசாரணை நடந்தது. காயமடைந்தவர்களை முதலுதவி சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட கரூர்- ஈரோடு சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை மற்றும் கரூர்-கோவை சாலையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு மதியம் 3 மணியளவில் சென்ற சிறப்பு குழுவினர், டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். எத்தனை பேர் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் என்ற புள்ளி விவரங்களை சேகரித்தனர். சிகிச்சையின் போது யாராவது உயிரிழந்தனரா? என்றும் கேட்டறிந்தனர். இந்த விசாரணை 3 மணி நேரம் நடந்தது.
