விருதுநகர், டிச.16: விருதுநகர் மாவட்டத்தில், தரமற்ற உணவுகளை விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்துள்ளதாவது: கிருஷ்ணன்கோவில் முத்து தெருவில் உள்ள ஒரு மனமகிழ் மன்றத்தில், நுகர்வோருக்கு வைக்கப்பட்டிருந்த மீன் ஃப்ரை உணவு மாதிரியை திருவில்லிபுத்தூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ், எடுத்து பகுப்பாய்விற்கு அனுப்பியதில், செயற்கை நிறமிகள் சேர்க்கப்ட்டதால் அந்த உணவு பாதுகாப்பற்றது என பகுப்பாய்வறிக்கையில் தெரிவிக்கக்கபட்டது.
இதை தொடர்ந்து மனமகிழ் மன்ற உணவு பாதுகாப்பு உரிமம் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டு, குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும் ராஜபாளையம் நகராட்சி கிருஷ்ணாபுரம் சாலையில் உள்ள 3 பெட்டி கடைகளை ஆய்வு செய்ததில் உணவு பாதுகாப்பு பதிவு சான்று பெறாமல் வணிகம் செய்வது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அந்த கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திருவில்லிபுத்தூர் கோவிந்தநகர் காலனி டியூசன் சென்டரில், உணவு பதிவு சான்றிதழ் இன்றி ஸ்நாக்ஸ் விற்பனை செய்ததை கண்டறிந்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை நகராட்சி சொக்கலிங்காபுரத்தில் உள்ள பாஸ்ட் புட் கடையில் அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக் பயன்படுத்தியது கண்டறியப்பட்டு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் நகராட்சி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள கடைகளை ஆய்வு செய்து அச்சிட்ட காகிதங்களில் ஸ்நாக்ஸ் வகை உணவு விற்பனை செய்தது கண்டறியப்பட்டு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
