தஞ்சாவூர், டிச. 16: தார்சாலை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நேற்று நடந்தது. அப்போது ராமநாதபுரம் ஊராட்சி மனோஜிபட்டி பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரளாக வந்தனர். அவர்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் ஊராட்சி மனோஜிபட்டியில் அய்யன் திருவள்ளுவர் நகர், சோழநகர் விரிவாக்கம், பாலசுப்பிரமணிய நகர் மற்றும் ராகவேந்திரா நகர் ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு 12-க்கும் மேற்பட்ட குறுக்கு தெருக்களும், 5-க்கும் மேற்பட்ட பிரதான தெருக்களும் உள்ளன. 600 குடும்பங்களில் சுமார் 2000 பேர் வசிக்கின்றனர்.
இந்நிலையில் இங்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இருப்பினும் இங்கு இதுவரை சாலை வசதி முழுமையாக ஏற்படுத்தித் தரவில்லை. பல்வேறு தெருக்களில் தார் சாலை வசதி இல்லாமல் சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதுகுறித்து முதலமைச்சர் முகாமில் இரண்டு முறை மனு அளிக்கப்பட்டுள்ளது. எங்கள் பகுதியில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் உரிய நேரத்தில் நோயாளிகளை கொண்டு செல்ல முடியவில்லை.
எனவே இந்த பகுதியில் உடனடியாக தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கூறப்பட்டுள்ளது.
