மக்கள் குறைதீர் கூட்டம்; மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கிய கலெக்டர்

அரியலூர்,டிச.16: அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 376 மனுக்கள் பெறப்பட்டது. அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி தலைமையில் நேற்று (15.12.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 376 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் பெற்று கொண்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், இன்றையதினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மூன்று சக்கர சைக்கிள் வேண்டி விண்ணப்பித்த 01 மாற்றுத்திறன் நபரின் மனுவின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மாற்றுத்திறன் நபருக்கு மூன்று சக்கர சைக்கிளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். அதனைத்தொடர்ந்து, பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் பெற்றோரை இழந்த 7 மாணவர்களுக்கு நடைபெற்ற உயர்க்கல்வி சேர்க்கையில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 மாணவர்கள் பெரம்பலூர் மாவட்டத்திலும், 2 மாணவர்கள் திருச்சி மாவட்டத்திலும் உயர்கல்வி பயின்று வருகின்றனர். மேலும் 3 மாணவர்கள் அரியலூர் மாவட்டத்திலேயே உயர்கல்வி பயின்று வருவதை தொடர்ந்து தமிழ்நாடு அரசின் அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் 3 மாணவர்களுக்கும் தமிழ்நாடு அரசின் மடிக்கணினியை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

பின்னர், தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை மாணவர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற மாநில அளவிலான வினாடி வினா போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிப்பெற்ற அரியலூர் மாண்ட்போர்ட் பள்ளி 7ம் வகுப்பு மாணவிகள் வர்ஷினி, கு.ஹயகிரிவ ஆகியோர் மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் டிசம்பர் 6, 7 அன்று நடைபெற்ற மாநில அளிலான தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திட்ட விளக்க காட்சி என்ற நிகழ்ச்சியில் சைக்ளோ கார்பன் வாட்டர் பில்டர் என்ற தலைப்பில் பங்கேற்று வெற்றிப்பெற்று, தேசிய அளவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 33 ஆய்வுகளில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டு, இளம் விஞ்ஞானி விருது வழங்கப்பட்டுள்ள அரியலூர் மாண்ட்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவிகள் பியாசென், சுஜித்ரா ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமியிடம் காண்பித்து வாழ்த்துப்பெற்றனர்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மா.ரேணுகோபால், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிசாமி, மாவட்ட கல்வி அலுவலர் (தனியார்) சீ.சித்ராதேவி, மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: