புதுக்கோட்டை, டிச.16: 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவுக்கல்வி இறுதி தேர்வினை 7,122 பேர் எழுதினர். தமிழ்நாட்டில் 15 வயதிற்கு மேற்பட்ட எழுதப்படிக்க தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவுக்கல்வி வழங்கிடும் வகையில் புதிய பாரத எழுத்தறிவுத்திட்டம் கடந்த 2022-2023ம் ஆண்டு முதல் 38 மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திட்ட இரண்டாம் கட்டத்தில் விரிவான கணக்கெடுப்பின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள 7122 கற்போருக்கு 2025 ஆகஸ்ட் மாதம் மாவட்டம் முழுவதும் 358 எழுத்தறிவு மையங்களில் தன்னார்வலர்கள் உதவியுடன் கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. 7122 பேர்களுக்கு இறுதி அடிப்படைத்தேர்வு கற்போர் எழுத்தறிவு மையம் செயல்படும் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் திருமயம் ஊராட்சி ஒன்றியம், அரண்மனை பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சவேரியார் புரம் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளி ஆகிய 2 மையங்களில் கற்போருக்கு நடைபெற்ற புதிய எழுத்தறிவுத்திட்ட அடிப்படை எழுத்தறிவுத்தேர்வினை பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக மாநில இயக்குநர் சுகன்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் உதவித்திட்ட அலுவலர் செந்தில், புதிய பாரத எழுத்தறிவு திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் மாயழகு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீரப்பன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
