தேனி, டிச. 16: பெரியகுளம் தாலுகாவில் வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் தேனி மண்டல விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டல துணை செயலாளர் நாகரத்தினம் கோரிக்கை மனு அளித்தார். மனுவில் கூறியிருப்பதாவது: பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவிக்கு செல்லும் சாலையில் இருபுறமும் 52 குடும்பத்தினர் வீடு இல்லாமல் சாலையோரம் குடியிருந்து வருகின்றனர்.
இவர்களுக்கும், பெரியகுளம் நகர் பட்டாளம்மன்கோயில் தெரு, பட்டாப்புளித் தெரு ஆகிய இடங்களில் சொந்த வீடு இல்லாத சுமார் 100 பேர் உள்ளனர். இவர்களது நிலை குறித்து கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக விசாரணை நடத்தி உள்ளனர். ஆனால், இதுவரை வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்படவில்லை. எனவே, தமிழக அரசின் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.
