ஆண்டிபட்டி அருகே உள்ள அரசு மருத்துவமனையில் ஸ்கேன் மையம் அமையுமா?

ஆண்டிபட்டி, டிச. 16: ஆண்டிபட்டி அருகே க.விலக்கு பகுதியில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தேனி மாவட்டம் மட்டுமின்றி திண்டுக்கல் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் வந்து பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு தினந்தோறும் 2 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட புறநேயாளிகளும், ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனியார் நிறுவனத்துடன் இணைந்த மருத்துவமனை வளாகத்தில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மையம் இயங்கி வந்தது. இங்கு எடுக்கப்படும் எம்.ஆர்.ஐ ஸ்கேன்களுக்கு மினிமம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் குறைந்த தொகையிலும் நோயாளிகள் ஸ்கேன் எடுத்து வந்தனர். 10 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்தால் இயங்கி வந்த எம்.ஆர்.ஐ ஸ்கேன் மையத்தின் ஒப்பந்தகாலம் நிறைவடைந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்கு ஸ்கேன் எடுக்கும் மையம் மூடப்பட்டது. இதனால் மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க வேண்டிய நோயாளிகள், தேனி சென்று ஸ்கேன் எடுக்கும் நிலை உள்ளது.

மருத்துவமனையில் இருந்து தேனிக்கு செல்ல முடியாமல் நோயாளிகளும் நோயாளிகளின் உறவினர்களும் தவித்து வருகின்றனர். மேலும் தேனியில் தனியார் ஸ்கேன் மையங்களில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுப்பதற்கு அதிகளவு செலவு ஏற்படுகிறது. ஆகையால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, எம்ஆர்ஐ ஸ்கேன் மையம் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: