காரைக்குடி, டிச.16: காரைக்குடி பாப்பா ஊரணியைச் சேர்ந்தவர் இந்திரா. பெட்டிக்கடை நடத்தி வந்தார். கடந்த 2020ம் ஆண்டு, கடையில் இருந்த இவரிடம், பைக்கில் வந்த இருவர் அட்ரஸ் கேட்பது போல் நடித்து, கழுத்தில் அணிந்திருந்த 5 பவன் தங்க தாலியை பறித்துச் சென்றனர்.
காரைக்குடி தெற்கு போலீஸ் ஸ்டேஷன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட சிவகங்கை வானியங்குடியைச் சேர்ந்த சங்கர் மற்றும் வைரம்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் மீது காரைக்குடி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கை, காரைக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் கார்மேக கண்ணன் நேற்று விசாரணை செய்தார். வழக்கின் விசாரணையில் சங்கர் மற்றும் ராஜ்குமார் இருவருக்கும் 3 வருட கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
