சிவகங்கையில் டிச.20ல் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கை,டிச.16: சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் டிச.20 அன்று தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து மாபெரும் தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் டிச.20ம் தேதி நடைபெற உள்ளது.

சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் காலை 9மணி முதல் மாலை 3மணி வரை இம்முகாம் நடைபெறும். முகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு 3,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு இளைஞர்களை தேர்வு செய்யவுள்ளனர். 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ போன்ற கல்வித் தகுதியுடைய அனைவரும் தங்களது சுயவிவரம், கல்விச்சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் முகாமில் பங்கேற்கலாம்.

இம்முகாமில் வேலைவாய்ப்பு பெற்று பணி நியமனம் பெறும் பதிவுதாரர்களுடைய வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது. முகாமில் போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம், பல்வேறு திறன் பயிற்சிகளுக்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பம் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பம் ஆகியவைகளும் வழங்கப்படும். கூடுதல் விவரங்கள், முன் பதிவு உள்ளிட்ட விவரங்களை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் அறியலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: