புதுடெல்லி: பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் 61 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன்சுராஜ் கட்சி 243 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு இடம் கூட வெற்றி பெறவில்லை. இந்த சூழலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை டெல்லியில் வைத்து பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. பீகார் தேர்தல் முடிவுகள் குறித்தும், அடுத்த மக்களவை தேர்தல் குறித்தும் இருதரப்பினரும் பல மணி நேரம் ஆலோசித்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு கடந்த வாரம் டெல்லியில் உள்ள சோனியா காந்தியின் 10, ஜன்பத் இல்லத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்பு குறித்துக் கேட்டபோது, பிரியங்கா காந்தி,’நான் யாரைச் சந்திக்கிறேன்… யாரைச் சந்திக்கவில்லை என்பதில் ஏன் இவ்வளவு ஆர்வம்’ என்று கேள்வி எழுப்பினார். ஆனால் பிரசாந்த் கிஷோர், எந்தச் சந்திப்பும் நடைபெறவில்லை என்று மறுத்தார்.
அடுத்த ஆண்டு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுவை மற்றும் 2027ல் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து 2029 மக்களவை தேர்தல் பணிகளை இப்போதே தொடங்க காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிரசாந்த் கிஷோர், பிரியங்கா காந்தியை சந்தித்து இருக்கலாம் என்ற தகவல் வௌியாகி உள்ளது.
