டெல்லி: புதிய 125 நாள் வேலைத்திட்ட மசோதாவுக்கு அறிமுக நிலையிலேயே எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடும் எதிர்ப்பை மீறி நாடாளுமன்றத்தில் 125 வேலைத்திட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. புதிய ஜி ராம் ஜி மசோதாவுக்கு அறிமுக நிலையிலேயே திமுக எதிர்ப்பு தெரிவித்தது. அந்த வகையில்,
மகாத்மா காந்தியை கேலிக்கு உள்ளாக்கிவிட்டது பாஜக அரசு: டி.ஆர்.பாலு
இந்தியா கிராமங்களில் இருந்துதான் உருவானது என்றார் மகாத்மா காந்தி. மகாத்மா காந்தி மீதுள்ள வெறுப்பின் காரணமாக வேறு பெயரில் ஒன்றிய அரசு புதிய மசோதாவைக் கொண்டுவந்துள்ளது. தேச தந்தையை கேலிக்குள்ளாக்கிவிட்டது என எம்.பி. டி.ஆர்.பாலு கட்டமாக தெரிவித்தார். மகாத்மா காந்தி பேசியதை கருத்தில் கொண்டு ஐ.மு.கூ. ஆட்சியில் பிரதமர் மன்மோகன் சிங் 100 நாள் வேலைத்திட்டத்தை கொண்டு வந்தார். 100 நாள் வேலைத்திட்டத்தின் மூலம் நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் பெற்றனர். நாட்டின் தேசப்பிதாவான மகாத்மா காந்தியை கேலிக்கு உள்ளாக்கிவிட்டது ஒன்றிய பாஜக அரசு
காந்தி பெயர் நீக்கம் – தேசத்தந்தையை அவமதிக்கும் செயல்: பிரேமச்சந்திரன் எம்.பி.
மகாத்மா காந்தி பெயரை நீக்குவது தேசத் தந்தையை அவமதிக்கும் செயல் என பிரேமச்சந்திரன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் புதிய மசோதாவால் மாநில அரசுகள் மீது நிதிச்சுமை ஏற்றப்படுகிறது.
125 நாள் வேலைத்திட்ட மசோதா – பிரியங்கா எதிர்ப்பு
புதிய 125 நாள் வேலைத்திட்ட மசோதாவுக்கு மக்களவையில் பிரியங்கா காந்தி எதிர்ப்பு தெரிவித்தார். ஒன்றிய அரசின் பங்களிப்பு 100 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக குறைக்கப்படுவதற்கு பிரியங்கா கடும் கண்டனம் தெரிவித்தார். 100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயரை நீக்கும் மசோதாவை உடனடியாக திரும்பப் பெற எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்.
காந்தி பெயரை நீக்குவதற்கு காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் எதிர்ப்பு
காந்தி பெயரை நீக்குவதற்கு காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அரசியல் அமைப்பின் அடித்தளம் மீது தாக்குதல்
புதிய மசோதா அரசியல் அமைப்பின் அடித்தளம் மீதான தாக்குதல் என கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். புதிய மசோதாவில் நிதிச் செலவினத்துக்கு உச்ச வரம்பு நிர்ணயிக்கப்படுவதால் அனைவருக்குமான திட்டம் என்பதே இல்லாமல் போய்விடும். மகாத்மா காந்தியை பிரதமர் மோடி பெரிதாக புகழ்ந்து பேசுகிறார், ஆனால் அவரது பெயரை திட்டத்தில் இருந்து நீக்குகிறார் என எதிர்ப்பு தெரிவித்தார்.
