சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை புகாரை ஏற்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு!!

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை புகாரை ஏற்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை வழக்கு தனி நபரின் புகார் அடிப்படையிலானது, போலீஸ் எஃப்ஐஆரின் அடிப்படையிலானது அல்ல; இந்நிலையில் சோனியா, ராகுலுக்கு எதிரான ED புகாரின் நம்பகத்தன்மையை தீர்மானிப்பது முறையல்ல. ஜவகர்லால் நேருவால் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகை கடந்த 2008ம் ஆண்டு மூடப்பட்டது. இந்த பத்திரிகையை நடத்திய ஏஜெஎல் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியதைத் தொடர்ந்து, அதன் கடனுக்கு ஈடாக ரூ.2,000 கோடி சொத்துக்கள் வெறும் ரூ.50 லட்சத்தில் யங் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. யங் இந்தியா நிறுவனத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி தலா 38 சதவீத பங்குகளை வைத்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் பெரும் முறைகேடு நடந்திருப்பதாக பாஜ மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி கடந்த 2014ல் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த விவகாரத்தில் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, சோனியா, ராகுல் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையை பரிசீலிப்பது தொடர்பான வழக்கில் இன்று டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது. இந்நிலையில், அமலாக்கத்துறையின் புகாரின் அடிப்படையில் டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரசின் மூத்த தலைவர்கள் சுமன் துபே, சாம் பிட்ரோடா மற்றும் யங் இந்தியா, டோடெக்ஸ் மெர்ச்சண்டைஸ் நிறுவனங்கள் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

கடந்த அக்டோபர் 3ம் தேதி இந்த வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இதுதொடர்பாக தகவல் நேற்று வெளியாகி உள்ளது. இந்த புதிய எப்ஐஆரில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 120B (குற்றச் சதி), 403 (நேர்மையற்ற சொத்து மோசடி), 406 (குற்றவியல் நம்பிக்கை மீறலுக்கான தண்டனை) மற்றும் 420 (மோசடி) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த நிலையில், சோனியா, ராகுலுக்கு எதிரான ED புகாரின் நம்பகத்தன்மையை தீர்மானிப்பது முறையல்ல என நீதிபதி தெரிவிக்கின்றனர். எஃப்ஐஆர் இல்லாத சூழலில் ஒருவருக்கு எதிராக சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது சரியல்ல என நீதிபதிகள் தெரிவிக்கின்றனர். அமலாக்கத்துறை புகாரை ஏற்க முடியாது என டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னே உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: