ஆண் நண்பரை மரத்தில் கட்டி போட்டு சிறுமி கூட்டு பலாத்காரம்: ஒடிசாவில் நடந்த கொடூரம்

 

புவனேஸ்வர்: ஒடிசாவில் ஆண் நண்பரை மரத்தில் கட்டி வைத்துவிட்டு 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர். ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரின் ஒதுக்குப்புறமான கால்வாய் சாலைப் பகுதியில், கடந்த 10ம் தேதி இரவு 8 மணியளவில் 17 வயதுடைய சிறுமி தனது 17 வயது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க இரண்டு நபர்கள், அந்தச் சிறுவனைத் தாக்கி வாயை அடைத்து அங்கிருந்த மரத்தில் கட்டிப் போட்டனர். பின்னர் கண்முன்னே அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அந்த கும்பல், அவரிடமிருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகளையும், ஆண் நண்பரிடமிருந்த பணத்தையும் பறித்துச் சென்றது.

இந்தச் சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் பயம் காரணமாக முதலில் நகை பறிப்பு வழக்கு மட்டுமே பதிவு செய்த நிலையில், பின்னர் 1-ம் தேதி தான் சிறுமி தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை வெளிப்படுத்தினார். இதையடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்கை மாற்றிய போலீசார், தீவிர விசாரணை நடத்தி நேற்று குற்றம்சாட்டப்பட்ட இரண்டு பேரையும் கைது செய்தனர். கைதானவர்களில் ஒருவன் ஏற்கனவே கொலை முயற்சி வழக்கில் கைதாகி சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து வீடியோ பதிவு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, மேலும் இக்குற்றத்தில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: