ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக காரில் ‘லிப்ட்’ கேட்ட வழிபோக்கர் எரித்துக்கொலை: காதலிக்கு அனுப்பிய மெசேஜால் சிக்கிக் கொண்ட வாலிபர்

 

லாத்தூர்: மகாராஷ்டிராவில் கடன் தொல்லையை சமாளிக்க இன்சூரன்ஸ் பணம் பெறுவதற்காக, வழிப்போக்கரை காரோடு எரித்துக் கொலை செய்துவிட்டு தான் இறந்துவிட்டதாக நாடகமாடிய நபர் காதலியால் போலீஸில் சிக்கினார். மகாராஷ்டிர மாநிலம் லாத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ் சவான் (34) என்ற கடன் வசூல் முகவர், வீட்டுக் கடன் மற்றும் அதிகளவிலான கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்துள்ளார். தனக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பில் ஆயுள் காப்பீடு இருந்ததால், தான் இறந்துவிட்டதாக நம்ப வைத்தால் குடும்பத்திற்குப் பணம் கிடைக்கும் எனத் திட்டமிட்டார். இதற்காகக் கடந்த 13ம் தேதி அவுசா பகுதியில் கோவிந்த் யாதவ் என்ற வழிப்போக்கருக்கு தனது காரில் ‘லிப்ட்’ கொடுத்து ஏற்றிக்கொண்டார். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை நிறுத்தி, அந்த நபரை இருக்கையோடு சேர்த்து கட்டி வைத்துவிட்டு, காரின் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்தார்.

அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் எரிந்த நிலையில், அது தனது உடல் தான் என்று நம்ப வைப்பதற்காகத் தனது கை செயினை சடலத்தின் அருகே வீசிச் சென்றுள்ளார். எரிந்த நிலையில் கார் மற்றும் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், அங்கிருந்த நகையை வைத்து இறந்தது கணேஷ் சவான் தான் என்று முதலில் கருதினர். இருப்பினும் விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீசார், கணேஷின் காதலியைத் தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது அவர், ‘விபத்திற்குப் பிறகும் கணேஷ் வேறொரு எண்ணிலிருந்து தனக்கு குறுஞ்செய்தி (மெசேஜ்) அனுப்பி வருகிறார்’ என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.

அந்தப் புதிய மொபைல் எண்ணை ஆய்வு செய்தபோது அவர் உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாகத் தனிப்படை போலீசார் அந்த சிக்னலை பின்தொடர்ந்து சென்று சிந்துதுர்க் மாவட்டத்தில் பதுங்கியிருந்த கணேஷ் சவானை நேற்று சுற்றி வளைத்துக் கைது செய்தனர். விசாரணையில், ‘கடன் தொல்லையில் இருந்து தப்பிக்கவும், குடும்பத்திற்கு ரூ. 1 கோடி இன்சூரன்ஸ் பணம் கிடைக்கவும் லிப்ட் கொடுத்து ஒருவரை கொன்றேன்’ என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Related Stories: