×

நிதிஷ்குமார் தலைமையில்தான் தேர்தல்; பீகாரில் பாஜவுக்கு ஐஜத நெருக்கடி: மகாராஷ்டிரா பார்முலாவுக்கு முட்டுக்கட்டை

புதுடெல்லி: பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் தான் எங்களது கூட்டணி சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் என்று ஒன்றிய அமைச்சரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவருமான ராஜீவ் ரஞ்சன் சிங் கூறினார்.  பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் தலைவரான முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. மாநில சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 84 எம்எல்ஏக்களும், ஐக்கிய ஜனதா தளத்திற்கு 48 எம்எல்ஏக்களும் உள்ளனர். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு மகாகத்பந்தன் கூட்டணியின் முதல்வராக இருந்த நிதீஷ் குமார், அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வராக பதவியேற்றார்.

எம்எல்ஏக்கள் அடிப்படையில் பார்த்தால் அதிக எம்எல்ஏக்களை பாஜக தான் பெற்றுள்ளது. ஆனால் குறைந்த எம்எல்ஏக்களை கொண்ட ஐக்கிய ஜனதா தளத்திற்கு முதல்வர் பதவியை பாஜக விட்டுக் கொடுத்துள்ளது. அதனால் ‘பீகார் பார்முலா’ தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் அவ்வப்போது சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் நடந்த மகாராஷ்டிரா தேர்தல் முடிவில் பாஜக கூட்டணியின் முதல்வரை தேர்வு செய்வதில் பல நாட்கள் இழுபறி நடந்தது. ஏற்கனவே முதல்வராக இருந்த ஏக்நாத் ஷிண்டேவே (சிவசேனா), மீண்டும் முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதற்கு பீகார் பார்முலா உதாரணமாக காட்டப்பட்டது. அதிக இடங்களை கைப்பற்றிய பாஜகவுக்கு துணை முதல்வர் பதவி ஒதுக்கலாம் என்றும் ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்தனர். எப்படியாகிலும் பாஜகவே நீண்ட இழுபறிக்கு பின் முதல்வர் பதவியை கைப்பற்றியது. அதனால் பீகார் பார்முலா மகாராஷ்டிராவில் ஒர்க்அவுட் ஆகவில்லை. இந்த நிலையில் பீகாரில் அடுத்தாண்டு சட்டப் பேரவை தேர்தல் நடப்பதால், முதல்வர் பதவிக்கு பாஜக சார்பில் வேட்பாளர் யாரேனும் முன்னிறுத்தப்படுவார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதுகுறித்து ஒன்றிய அமைச்சரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவருமான ராஜீவ் ரஞ்சன் சிங் கூறுகையில், ‘பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் தான் எங்களது கூட்டணி சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும். பீகாரில் நடந்த மக்களவைத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியது. பீகாரில் பாஜக மட்டுமின்றி எல்ஜேபி (ராம் விலாஸ்), இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்றது) ஆகிய கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கின்றன’ என்று கூறினார். ஒன்றிய அமைச்சரின் இந்த கருத்து மாநில பாஜக தலைவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post நிதிஷ்குமார் தலைமையில்தான் தேர்தல்; பீகாரில் பாஜவுக்கு ஐஜத நெருக்கடி: மகாராஷ்டிரா பார்முலாவுக்கு முட்டுக்கட்டை appeared first on Dinakaran.

Tags : Nitish Kumar ,Bajaa ,New Delhi ,Union Minister ,United Janata Dalam Party ,Rajiv Ranjan Singh ,Bihar ,Chief Minister ,United Janata Dalam ,Maharashtra ,
× RELATED ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்...