×

சம்பா அறுவடை துவங்கியது; செஞ்சி மார்க்கெட் கமிட்டிக்கு நெல் வரத்து தொடங்கியது

செஞ்சி, டிச. 25: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் சம்பா நெல் அறுவடை துவங்கி செஞ்சி மார்க்கெட் கமிட்டிக்கு நெல் வரத்து தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெஞ்சல் புயலால் மழை வெள்ளம் ஏற்பட்டு செஞ்சி, வல்லம் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெல் தண்ணீரில் மூழ்கி இருந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மழைநீர் வடிந்ததால் மேடான பகுதிகளில் உள்ள சம்பா நெற்பயிர்கள் அறுவடை தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் குறைந்த அளவே சம்பா நெல் அறுவடை நடந்து குறைந்த நெல் மூட்டைகள் செஞ்சி மார்க்கெட் கமிட்டிக்கு விற்பனைக்கு வந்தது.

இதனால் கடந்த ஆண்டு ரூ.3 ஆயிரத்து 500 வரை பொன்னி நெல் விற்பனையானது. இந்த ஆண்டு பருவ மழை தாமதமாக பெய்ததால் கிணற்று பாசனம், ஆற்றுப் பாசனம் மூலம் சம்பா நெற்பயிர் அறுவடை செய்து வருகின்றனர். இவ்வாறு அறுவடை செய்த நெல் மூட்டைகள் செஞ்சி மார்க்கெட் கமிட்டிக்கு விற்பனைக்காக கொண்டு வந்து விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் 5 ஆயிரம் மூட்டையும், நேற்று 3 ஆயிரம் நெல் மூட்டைகளும் விற்பனைக்காக வந்திருந்தது. இதில் 75 கிலோ பொன்னி நெல் மூட்டை ரூ.ஆயிரத்து 800 முதல் ரூ.2 ஆயிரத்து 350 வரை விற்பனை ஆனது. குறுகிய கால நெல் வகைகளான குண்டு நெல், சன்னரக நெல் வகைகள் ரூ.ஆயிரத்து 600 முதல் ரூ.ஆயிரத்து 800 வரை விற்பனையானது. பொங்கல் பண்டிகையின்போது பத்தாயிரம் நெல் மூட்டைகள் வரும் என்று எதிர்பார்க்கின்றனர். இதற்கான போதிய வசதிகளை செஞ்சி மார்க்கெட் கமிட்டி நிர்வாகம் செய்துதர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post சம்பா அறுவடை துவங்கியது; செஞ்சி மார்க்கெட் கமிட்டிக்கு நெல் வரத்து தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Chenxi Market Committee ,Senchi ,Senji, Viluppuram district ,Senji Market Committee ,Benchel ,Vallam ,Senchi Market Committee ,Dinakaran ,
× RELATED செஞ்சி அருகே பயங்கரம் டிராக்டர் டிரைவர் கிணற்றில் தள்ளி கொலை