×

வீட்டிலிருந்தபடி பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறி புதுவை நபர் உட்பட 6 பேரிடம் ₹2.78 லட்சம் மோசடி

புதுச்சேரி, ஜன. 4: வீட்டிலிருந்தபடி அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறி புதுவை நபர் உட்பட 6 பேரிடம் ₹2.78 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி மூலகுளம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த். இவரை மர்ம நபர் தொடர்புகொண்டு வீட்டிலிருந்தபடி பகுதி நேரம் வேலை வாய்ப்பு மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறியுள்ளார். இதனை நம்பி அரவிந்தும், மர்ம நபருக்கு ₹1.51 லட்சத்தை அனுப்பியுள்ளார். பின்னர் அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடித்தும், சம்பாதித்த பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை. அதன்பிறகே அவர் மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது.

இதேபோல் காரைக்காலை சேர்ந்த தாமரை செல்வன் என்பவரும் ₹97 ஆயிரத்தை மோசடி கும்பலிடம் இழந்துள்ளார். மேலும், முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த கனிமொழி என்பவர் குறைந்த வட்டியில் பணம் கிடைக்கும் என்பதை நம்பி மர்ம நபரிடம் ₹17 ஆயிரத்தை இழந்துள்ளார். காமராஜர் நகரை சேர்ந்த ஸ்டீபன் ₹4 ஆயிரம், தென்றல் நகரை சேர்ந்த ஜனார்த்தனன் ₹4 ஆயிரம் மற்றும் ஒதியஞ்சாலை நந்தினி ₹5 ஆயிரம் என மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் மொத்தமாக ₹2.78 லட்சத்தை மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எவ்வளவு தான் ஒருபுறம் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் மறு புறம் தினமும் ஏமாந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post வீட்டிலிருந்தபடி பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறி புதுவை நபர் உட்பட 6 பேரிடம் ₹2.78 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Aravind ,Moolakulam ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் வழக்கமான கொண்டாட்டம் கிடையாது!