×

திருக்கோவிலூர் அருகே கரும்புக்கு காவல் இருந்த விவசாயி சரமாரி அடித்து கொலை

 

திருக்கோவிலூர், ஜன. 1: திருக்கோவிலூர் அருகே கரும்புக்கு காவல் இருந்த விவசாயி சரமாரியாக அடித்து கொலை செய்யப்பட்டார். இதையடுத்து கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே நாயனூர் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு விவசாயி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டதாக அரகண்டநல்லூர் போலீசுக்கு தகவல் வந்தது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவத்தின்போது இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேரை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து கட்டிப்போட்டு வைத்திருந்தனர். போலீசார் அவர்களை மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லும்போது பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல் ஆய்வாளர் சாகுல் அமீத், உதவி ஆய்வாளர் குருபரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்திவிட்டு 2 பேரையும் அழைத்துச் சென்றனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், நாயனூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் மகன் விவசாயி மணி (எ) மணிகண்டன் (36), மாயவன் மகன் துரைராஜ், ஏழுமலை மகன் சுரேஷ் மற்றும் கார்த்திகேயன் (29) ஆகிய 4 பேரும் அப்பகுதியில் உள்ள பெரியாயி அம்மன் கோயில் பின்புறம் உள்ள களத்தில் கரும்புக்கு காவல் காத்திருந்தனர். அப்போது வீரபாண்டி பகுதியில் இருந்து நாயனூர் நோக்கி பைக்கில் வந்த வீரபாண்டி பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் வினோத் கோயில் அருகே பைக்கை நிறுத்தியுள்ளார்.

அப்போது அங்கிருந்த 4 பேரும் வினோத்திடம் விசாரித்துள்ளனர். இதில் வினோத் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் வினோத் அவர்களை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் மணிகண்டன் உள்ளிட்ட 4 பேரும் வினோத்தை திட்டி கிளம்புமாறு கூறியுள்ளனர். இதில் கோபமடைந்த வினோத் செல்போன் மூலம் வீரபாண்டி பகுதியை சேர்ந்த அண்ணன் பழனிவேல்,  ஏழுமலை மகன் பார்த்திபன், சேட்டு மகன் பாக்கியராஜ், ஏழுமலை மகன் கோபி ஆகியோரை அழைத்துள்ளார்.

அதன்படி அங்கு வந்த 4 பேர் மற்றும் வினோத் சேர்ந்து செங்கல்லால் மணிகண்டனை சரமாரியாக தாக்கினார்களாம். இதில் மணிகண்டன் மயங்கி விழுந்துள்ளார். தொடர்ந்து துரைராஜ், சுரேஷையும் தாக்கிவிட்டு தப்பித்து சென்றனர். அங்போது அங்கு வந்த நாயனூர் பகுதி மக்கள் தப்ப முயன்ற வினோத் அண்ணன் பழனிவேல், பார்த்திபனை மட்டும் பிடித்தனர். மற்ற 3 பேரும் பைக்கில் தப்பினர். பின்னர் மணிகண்டனை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறினர். இவ்வாறு விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த மணிகண்டன் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நள்ளிரவில் அரகண்டநல்லூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மணிகண்டன் இறப்பிற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தினர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்கள் தேவனூர் கூட்ரோடு பகுதியில் திருக்கோவிலூர்- விழுப்புரம் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த அரகண்டநல்லூர் காவல் ஆய்வாளர் சாகுல் ஹமீது, விக்கிரவாண்டி காவல் ஆய்வாளர் பாண்டியன் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அரகண்டநல்லூர் போலீசார் தனிப்படை அமைத்து ஊரில் பதுங்கி இருந்த வினோத், கோபி, பாக்கியராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுளளது.

The post திருக்கோவிலூர் அருகே கரும்புக்கு காவல் இருந்த விவசாயி சரமாரி அடித்து கொலை appeared first on Dinakaran.

Tags : Thirukovilur ,Nayanur ,Villupuram ,
× RELATED திருக்கோவிலூர் பகுதியில் வெள்ளத்தால்...