×

செஞ்சி அருகே பயங்கரம் டிராக்டர் டிரைவர் கிணற்றில் தள்ளி கொலை

செஞ்சி, டிச. 28: செஞ்சி அருகே மது வாங்கி தராததால் டிராக்டர் டிரைவரை கிணற்றில் தள்ளி கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள நெகனூர் மதுரா வடகொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டுரங்கன் மகன் ஏழுமலை (39). டிராக்டர் டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் பெருமாள் மகன் சிவக்குமார் (45). கடந்த 21ம் தேதி டிராக்டர் ஓட்டுவதற்காக ஏழுமலையின் வீட்டிற்கு வந்து அவரை பைக்கில் சிவக்குமார் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் 22ம் தேதி ஏழுமலை வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து அவரது மனைவி சுமதி, வளத்தி போலீசில் கணவரை காணவில்லை என புகார் செய்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து வளத்தி போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில், ஏழுமலையை அழைத்துச் சென்ற சிவக்குமாரை சந்தேகத்தின்பேரில் நேற்றுமுன்தினம் பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.

அதில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றபோது, வழியில் நிறுத்தி ஏழுமலையிடம், சிவக்குமார் மது கேட்டுள்ளார். ஆனால் ஏழுமலை மது வாங்கி தராததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிவக்குமார், அதே பகுதியில் உள்ள கிணற்றில் ஏழுமலையை தள்ளி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த ஏழுமலை கிணற்றில் இறந்து கிடந்தார். பின்னர் மறுநாள் சிவக்குமார், அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் முனுசாமி(39) என்பவருடன் சம்பவம் நடந்த பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு கிணற்றில் கிடந்த ஏழுமலையின் சடலத்தை, சிவக்குமாரும், முனுசாமியும் சேர்ந்து காரில் எடுத்து வந்து நெகனூர் கால்வாய் பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளனர். இவ்வாறு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வளத்தி போலீசார் வழக்கு பதிந்து சிவகுமார், முனுசாமி ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post செஞ்சி அருகே பயங்கரம் டிராக்டர் டிரைவர் கிணற்றில் தள்ளி கொலை appeared first on Dinakaran.

Tags : Senchi ,Pandurangan ,Neganur Mathura Vadakollai ,Villupuram ,
× RELATED மகாராஷ்டிராவில் உயிரிழந்து விட்டதாக...