×

காசாவில் மறுகட்டமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கான டிரம்பின் அமைதி வாரியம் உருவானது: பாகிஸ்தான் உள்ளிட்ட 22 நாடுகள் இணைந்தன; ஐரோப்பா மற்றும் நட்பு நாடுகள் புறக்கணிப்பு; இந்தியா, ரஷ்யா, சீனா கையெழுத்திடவில்லை

டாவோஸ்: போரால் பாதிக்கப்பட்ட காசாவில் மறுகட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளவதற்கான அமெரிக்க அதிபர் டிரம்பின் காசா அமைதி வாரியத்தில் இணைய 22 நாடுகள் சம்மதித்துள்ளன. ஐரோப்பா மற்றும் நெருங்கிய நட்பு நாடுகள் தயக்கம் காட்டுகின்றன. இந்தியாவும் கையெழுத்து நிகழ்வில் பங்கேற்காமல் புறக்கணித்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் ஏற்பட்டது. இந்த போர் நிறுத்த திட்டத்தின் 2ம் கட்டமாக காசா அமைதி வாரியம் அமைக்கப்படும் என டிரம்ப் அறிவித்தார்.

சர்வதேச குழுவாக இருக்கும் இந்த வாரியம் காசாவில் போர் நிறுத்த பணிகளை கண்காணிப்பதோடு, அதன் மறுகட்டமைப்பு பணிகளையும் மேற்கொள்ளும். இந்த வாரியத்தில் சேர ஒவ்வொரு நாடுகளும் தலா சுமார் ரூ.9000 கோடியை செலுத்த வேண்டும். இந்த நிதியின் மூலம் காசாவில் மறுகட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என ஆரம்பத்தில் கூறப்பட்ட நிலையில், பின்னர் இந்த வாரியம் மத்திய கிழக்கு மட்டுமின்றி எதிர்கால போர்களுக்கும் தீர்வு காணும் வகையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனால் ஐநாவுக்கு போட்டியாக அமெரிக்கா தலைமையில் டிரம்ப் புதிய வாரியத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இதனால் இந்த வாரியத்திற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அதே சமயம் அமைதி வாரியத்தில் சேர 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் டாவோசில் நடக்கும் உலக பொருளாதார மன்றத்தில் வருடாந்திர கூட்டத்தில் நேற்று டிரம்பின் காசா அமைதி வாரியத்தில் இணையும் நாடுகள் கையெழுத்திடும் நிகழ்வு நடந்தது. இதில், அதிபர் டிரம்ப் முன்னிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்ட 22 நாடுகளின் தலைவர்கள் அமைதி வாரியத்தில் சேர சம்மதம் தெரிவித்தனர்.

அப்போது பேசிய டிரம்ப், ‘‘இந்த வாரியம் அமெரிக்கானது அல்ல, ஒட்டுமொத்த உலகத்திற்கானது. இது உலகத்தில் மிகமிக தனித்துவமானது. இந்த வாரியம் ஐநாவுடன் இணைந்து மத்திய கிழக்கு மட்டுமின்றி அனைத்து போர்களுக்கும் தீர்வு காணும்’’ என்றார். ஆனால், ஐநாவுடன் டிரம்பின் அமைதி வாரியம் எந்த வகையில் இணைந்து செயல்படும் என்பது குறித்து அவர் தெளிவுபடுத்தவில்லை. அதே சமயம், பிரான்ஸ், நார்வே, ஸ்வீடன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும், இங்கிலாந்து உள்ளிட்ட அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளும் கூட அமைதி வாரியத்தில் இணையவில்லை. இந்தியா, ரஷ்யா, சீனாவும் கையெழுத்து நிகழ்வில் பங்கேற்காமல் புறக்கணித்தன.

அமைதி வாரியத்தில் இணைய அதிபர் டிரம்ப் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், இது குறித்து இந்தியா இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த முயற்சி உணர்வுப்பூர்வமான விஷயங்களை உள்ளடக்கியிருப்பதால், பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு ஆலோசிப்பதாக அவர்கள் கூறி உள்ளனர். இஸ்ரேலும் பாலஸ்தீனமும் அமைதியுடனும் பாதுகாப்பாகவும் அருகருகே வாழும் வகையில், பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு அரசுத் தீர்வை இந்தியா வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இந்த வாரியத்தில் இணைய அனைத்து நாடுகளும் ஆவலுடன் இருப்பதாக அதிபர் டிரம்ப் கூறி உள்ளார்.

* ஐரோப்பிய நாடுகள் மீதான 10% வரி ரத்து
அமெரிக்க அதிபர் டிரம்ப் டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீன்லாந்து தீவை விலைக்கு வாங்க விருப்பம் தெரிவித்திருந்தார். இதற்கு ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததால், டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய 8 நாடுகள் மீது 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அவர் மிரட்டல் விடுத்திருந்தார். இந்த வரி விதிப்பு வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ‘கிரீன்லாந்து மற்றும் ஆர்டிக் பிராந்திய பாதுகாப்பு தொடர்பாக எதிர்கால ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள் மீது விதிக்கப்படவிருந்த 10ம் சதவீத வரியை ரத்து செய்கிறேன்’ என்றார். டிரம்பின் இந்த அறிவிப்பால் போர் பதற்றம் தணிந்து அமெரிக்க பங்குச்சந்தைகள் 1.2ம் சதவீதம் உயர்வடைந்தது.

* பிரதமர் மோடி அற்புதமான மனிதர்
அதிபர் டிரம்ப் கூறுகையில்,’உங்கள் பிரதமர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர் ஒரு அற்புதமான மனிதர், என்னுடைய நண்பர். எங்களுக்கு நல்ல ஒப்பந்தம் ஏற்படும்’ என்று கூறியிருந்தார். இதுகுறித்து ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறும்போது,’ இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் உலகளாவிய வர்த்தக விஷயங்களில் ஆழமான ஈடுபாட்டைக் பார்க்கும் போது இது மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது’ என்றார்.

* போர் முடிவுக்கு வர வேண்டும்
அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். இதன் பின் பேட்டி அளித்த டிரம்ப், ‘‘அதிபர் ஜெலென்ஸ்கியுடனான சந்திப்பு நன்றாக இருந்தது. அமெரிக்க குழு புடினை சந்திக்க உள்ளது. புடினுக்கான எனது செய்தி, உக்ரைன் போர் முடிவுக்கு வர வேண்டும். இதில் நிறைய பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்’’ என்றார்.

* இணைந்த, இணையாத நாடுகள்
டிரம்பின் அமைதி வாரியத்தில் சேர சம்மதம் தெரிவித்த நாடுகள்: அர்ஜென்டினா, அல்பேனியா. ஆர்மீனியா, அஜர்பைஜான், பஹ்ரைன், பெலாரஸ், பல்கேரியா, எகிப்து, ஹங்கேரி, இந்தோனேசியா, ஜோர்டான், கஜகஸ்தான், கொசோவோ, மொராக்கோ, மங்கோலியா, பாகிஸ்தான், கத்தார், சவூதி அரேபியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், உஸ்பெகிஸ்தான், வியட்நாம்.
சேர மாட்டோம் என முடிவெடுத்துள்ள நாடுகள்: பிரான்ஸ், நார்வே, ஸ்லோவேனியா, ஸ்வீடன், இங்கிலாந்து.
முடிவெடுக்காத நாடுகள்: கம்போடியா, சீனா, குரோஷியா, சைப்ரஸ், கிரீஸ், ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, ஐரோப்பிய ஒன்றியம், பராகுவே, ரஷ்யா, சிங்கப்பூர், தாய்லாந்து, உக்ரைன்.

* அதிபர் புடின் நக்கல்
காசா அமைதி வாரியத்தில் இணையும் நிகழ்வு நேற்று தொடங்கப்பட்ட நிலையில் ரஷ்ய அதிபர் புடின், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாசை மாஸ்கோவில் நேற்று சந்தித்து பேசினார். அவரை வரவேற்ற புடின், ‘‘மத்திய கிழக்கு மோதலுக்கு இறுதித் தீர்வு காண்பதற்கு, இறையாண்மை கொண்ட பாலஸ்தீனிய நாட்டின் உருவாக்கம் மட்டுமே ஒரே வழி என்று நாங்கள் நம்புகிறோம்’’ என்றார். மேலும், டிரம்பின் அமைதி வாரிய அழைப்பை வரவேற்ற அதிபர் புடின், காசாவை மீண்டும் கட்டியெழுப்பு ரூ.9,000 கோடி தர ரஷ்யா தயாராக இருப்பதாக கூறியதோடு, அமெரிக்காவில் முடக்கப்பட்ட ரஷ்யாவின் சொத்துக்களிலிருந்து அந்த தொகையை ஒதுக்க தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

Tags : Trump ,Peace Board ,Gaza ,Pakistan ,Europe ,India ,Russia ,China ,Davos ,U.S. ,President Trump ,Gaza Peace Board ,
× RELATED சிரியா சிறைகளில் இருந்து 150 ஐஎஸ்...