லாஸ்ஏஞ்சல்ஸ்: திரையுலகில் சர்வதேச அளவில் பெருமைக்குரிய விருதாக கருதப்படுவது, ஆஸ்கர் விருது. வருடந்தோறும் மார்ச் 16ம் தேதி ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும். தற்போது 98வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதில் 24 பிரிவுகளில் வழங்கப்படும் விருதுக்கான இறுதி நாமினேஷன் பட்டியல் நேற்று வெளியானது. முன்னதாக இந்தியாவில் இருந்து ‘ஹோம்பவுண்ட்’ என்ற இந்தி படம், சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பரிந்துரை பட்டியலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், கடைசி சுற்றில் அப்படம் வெளியேறியுள்ளது.
நேற்று வெளியிடப்பட்ட நாமினேஷன் பட்டியலில், சிறந்த முன்னணி நடிகருக்கான பிரிவில் ‘மார்டி சுப்ரீம்’ படத்துக்காக டிமோதி சலமெட், ‘ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்’ படத்துக்காக லியோனார்டோ டிகாப்ரியோ, ‘ப்ளூ மூன்’ படத்துக்காக ஈதன் ஹாக், ‘சின்னர்ஸ்’ படத்துக்காக மைக்கேல் பி.ஜோர்டான், ‘தி சீக்ரெட் ஏஜெண்ட்’ படத்துக்காக வாக்னர் மவுரா ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர். சிறந்த முன்னணி நடிகைக்கான நாமினேஷன் பிரிவில் ஜெஸ்ஸி பக்லி, ரோஸ் பைரன், கேட் ஹட்சன், எம்மா ஸ்டோன், ரெனேட் ரெய்ன்ஸ்வே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சிறந்த திரைப்படங்களுக்கான பிரிவில் ‘புகோனியா’, ‘எஃப் 1’, ‘ஃபிராங்கன்ஸ்டைன்’, ‘ஹாம்நெட்’, ‘மார்டி சுப்ரீம்’, ‘ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்’, ‘தி சீக்ரெட் ஏஜெண்ட்’, ‘சென்டிமெண்டல் வேல்யூ’, ‘சின்னர்ஸ்’, ‘டிரைன் டிரீம்’ ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக ‘சின்னர்ஸ்’ படம் 16 பிரிவுகளிலும், ‘ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்’ படம் 13 பிரிவுகளிலும் மற்றும் ‘ஃபிராங்கன்ஸ்டைன்’, ‘மார்டி சுப்ரீம்’, ‘சென்டிமெண்டல் வேல்யூ’ ஆகிய படங்கள் 9 பிரிவுகளிலும், ‘ஹாம்நெட்’ படம் 8 பிரிவுகளிலும், ‘புகோனியா’ படம் 4 பிரிவுகளிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அதிக வசூலை குவித்த படமான ‘எஃப் 1’ படம் 4 பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த பிரிவிலும் இந்திய படங்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
