ஜாக்ரெப்: குடியரசு தினவிழாவில் ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குரோஷியாவில் உள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. டெல்லியில் ஜன.26ஆம் தேதி நடக்கும் குடியரசு தின விழாவில் ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்கு வெளிநாடுகளில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் குரோஷியா தலைநகர் ஜாக்ரெப்பில் உள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கு அத்துமீறி புகுந்த காலிஸ்தான் பிரிவினைவாதிகள் நாசவேலையை மேற்கொண்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: குரோஷியாவின் ஜாக்ரெப்பில் உள்ள எங்கள் தூதரகத்தில் இந்திய விரோத சக்திகளால் அத்துமீறி நுழைந்து நாசவேலை செய்த சம்பவத்தை நாங்கள் கண்டிக்கிறோம். வியன்னா மாநாட்டின் கீழ், ராஜாங்க வளாகங்களுக்குள் யாரும் அத்துமீறி செல்ல முடியாதவை. அந்த வளாகங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இதுகுறித்து ஜாக்ரெப்பில் உள்ள குரோஷிய அதிகாரிகளிடம் இந்த விஷயத்தை நாங்கள் கடுமையாக எடுத்துக் கொண்டுள்ளோம். மேலும் குற்றவாளிகளை அவர்களின் கண்டிக்கத்தக்க மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்கச் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். இதுபோன்ற செயல்கள் அவற்றின் பின்னணியில் இருப்பவர்களின் தன்மை மற்றும் நோக்கங்களைப் பற்றியும் பேசுகின்றன. மேலும் எல்லா இடங்களிலும் உள்ள சட்ட அமலாக்க அதிகாரிகள் அவர்களைக் கவனத்தில் கொள்வது நல்லது. இவ்வாறு தெரிவித்துள்ளது.
