வேட்பு மனுதாக்கல் துவங்கிய நிலையில் கூட்டணி பேச்சு மும்முரம்: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கே.எஸ்.அழகிரி, வேல்முருகன் பேச்சுவார்த்தை

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கிய நிலையில், முக்கிய அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை மும்முரம் அடைந்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கே.எஸ்.அழகிரி, வேல்முருகன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிமுக- பாஜ தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளுக்கு உட்பட்ட 1,374 வார்டு உறுப்பினர் பதவிகள், 138 நகராட்சிகளுக்கு உட்பட்ட 3,843 வார்டு உறுப்பினர் பதவி, 490 பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 7,621 வார்டு உறுப்பினர் பதவி இடங்கள் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான தேர்தல் வருகிற 19ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.

முதல் நாள் என்பதால் நேற்று நிறைய சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தனர். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளில்  வேட்பாளர்கள் திங்கட்கிழமைக்கு பிறகு வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று கூறப்படுகிறது. குறுகிய காலமே தேர்தலுக்கு உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் தேர்தல் பணியை முடுக்கி விட்டுள்ளன. இந்த நிலையில் ஆளுங்கட்சியான திமுக தேர்தலை சந்திக்கும் வகையில் தீவிரமாக களம் இறங்கியுள்ளது. மாவட்ட வாரியாக தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு நேர்காணல் நடந்து முடிந்துள்ளது.

வேட்பாளர்கள் தற்போது இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இக்கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை அந்தந்த மாவட்ட அளவில் நடந்து வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கான இடபங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று சென்னை அண்ணா அறிவாலயம் வந்தார்.

அவருடன் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் வந்திருந்தனர். அவர்களுடன், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டிய வார்டுகள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பை தொடர்ந்து வெளியில் வந்த கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ பல மாவட்டங்களில் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்திருக்கிறது.

சில மாவட்டங்களில் 2வது முறையாகவும் பேசியிருக்கிறார்கள். ஏனென்றால் பல கட்சிகளுடன் பேச வேண்டியுள்ளது. பேச்சுவார்த்தை எல்லாம் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கிறது. தேவை வரும் போது அடுத்தகட்டமாக முதல்வரை சந்திப்போம்’’ என்றார். இதை தொடர்ந்து, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இடபங்கீடு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சந்திப்புக்கு பின்னர் வேல்முருகன் அளித்த பேட்டியில், ‘‘தமிழகத்தில் வாழ்வுரிமை கட்சிக்கு செல்வாக்கு உள்ள இடங்களில் தொகுதிகளை ஒதுக்க முதல்வரிடம் விருப்பம் தெரிவித்துள்ளோம்’’ என்றார்.

தொடர்ந்து கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளனர். திமுகவில் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு நாட்களில் பேச்சுவார்த்தை முடிந்து கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு இடம் என்பது இறுதி செய்யப்பட்டு விடும். அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் பாஜ இடம் பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள ஒரே பெரிய கட்சி பாஜ தான். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் அதிமுக கூட்டணியில் பாஜ, பாமக கட்சிகள் இடம் பெற்றன. தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தலிலும் இந்த கூட்டணி நீடித்தது.

தேர்தலுக்கு பிறகு கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில் சட்டப்பேரவை தேர்தலில் தோல்விக்கு அதிமுக தான் காரணம் என்று பாமக, பாஜவினர் சரமாரியாக குற்றச்சாட்டை தெரிவித்தனர். அதே நேரத்தில் பாஜவை கூட்டணியில் சேர்த்ததால் தான் அதிமுக தோல்வியை சந்தித்தது என்று அதிமுக தலைவர்கள் வெளிப்படையாக குற்றம் சாட்டினர்.  தற்போது அதிமுக கூட்டணியில் பாஜ மட்டும் தான் உள்ளது. இந்த கூட்டணி நடைபெற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நீடிக்குமா? என்ற கேள்வி எழுந்து வந்தது. அதே நேரத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.  

எனவே, நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜவை கூட்டணியில் சேர்த்தால் மீண்டும் தோல்வியை தான் அதிமுக சந்திக்க நேரிடும். எனவே, அவர்களை கூட்டணியில் சேர்க்க கூடாது என்று அதிமுகவில் உள்ள மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். மூத்த தலைவர்களின் வலியுறுத்தலுக்கு ஏற்ப அதிமுக தலைமையும் இதுவரை பாஜவை கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக இதுவரை எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை. அவர்களும் பாஜவை கூட்டணியில் வேண்டாம் என்று நினைக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் நாகப்பட்டினத்தில் அதிமுக அனைத்து தொகுதியிலும் போட்டியிடும் என்று மாவட்ட செயலாளர் ஓ.எஸ்.மணியன் அறிவித்தார்.

இதே போல பல மாவட்டங்களில் அதிமுக அனைத்து வார்டுகளிலும் போட்டியிடும் என்று அந்தந்த மாவட்ட செயலாளர்கள் அறிவிக்க தொடங்கியுள்ளனர். தஞ்சாவூர் மாணவி விவகாரத்தில் பாஜ எடுத்த முடிவால் இன்னும் அதிமுகவுக்கு பின்னடைவு தான் ஏற்படும் என்று அதிமுக தலைவர்கள் கருதுகின்றனர். இதனால், அதிமுக கூட்டணியில் இருந்து பாஜவை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை அதிமுகவில் வலுத்துள்ளது. அவர்களை சேர்த்து தேர்தலை சந்தித்தால் படுதோல்வியை தான் சந்திக்க வேண்டும் என்று அதிமுக தலைவர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் அதிமுகவில் இருந்தவர்கள் தான் பாஜவில் முக்கிய இடத்தில் இருக்கிறார்கள். அங்கே இருந்து கொண்டு அதிமுகவை கடுமையாக தாக்கி பேசி வருகிறார்கள்.

அவர்களுடன் எப்படி பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதே நேரத்தில் பாஜ தலைவர்களின் போன் கால் மற்றும் சந்திப்பை அதிமுக தலைவர்கள் தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் அதிமுக மாவட்ட செயலாளர்கள் பல மாவட்டங்களில் அனைத்து வார்டுகளிலும் அதிமுக போட்டியிடும் என்று அறிவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் அதிமுக இதுவரை பாஜவை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இதனால், பாஜ தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிமுகவின் இந்த முடிவை அடுத்து தனித்து போட்டியிடலாமா? அல்லது அதிமுக அளிக்கும் வார்டுகளில் போட்டியிடலாமா? என்ற முடிவுக்கு வந்துள்ளது. இதனால், அதிமுக, பாஜவில் ஒரு குழப்பமான நிலை நீடித்து வருகிறது.

இந்த நிலையில் பாஜ தலைவர் அண்ணாமலை கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எவ்வாறு சந்திப்பது என்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதிமுக பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்பது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டணிக்கு அழைப்பு விடுக்காத பட்சத்தில் தனித்து போட்டியிடவும் பாஜ தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது தேர்தலை எவ்வாறு சந்திப்பது, யார் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எவ்வளவு இடங்களை ஒதுக்குவது என்பது குறித்தும் பேசப்பட்டது. அதிமுக கூட்டணியில் பாஜவை சேர்க்ககூடாது என்று கட்சியின் மூத்த தலைவர்கள் குரல் எழுப்பி வருவது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது கூட்டணியில் பாஜவை வைத்து கொள்ளலாமா? அவர்களை கூட்டணியில் இருந்து வெளியேற்றலாமா என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் தான் இன்னும் அதிமுக இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் பாஜ இடம் பெறுமா அல்லது பாஜ தனித்து போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேநேரத்தில், பாமக, தேமுதிக, மநீம, நாம் தமிழர்,அமமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். இதனால் அவர்கள் வேட்பாளர்கள் தேர்வில் தீவிரமாகியுள்ளனர். மநீம மட்டும் பல இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். மற்ற கட்சிகள் ஓரிரு நாளில் அறிவிக்க திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: