ஓரணியில் தமிழ்நாடு மாபெரும் முன்னெடுப்பில் இதுவரை 2 கோடி பேர் இணைந்தனர்

சென்னை: ஓரணியில் தமிழ்நாடு மாபெரும் முன்னெடுப்பில் 2 கோடி பேர் இணைந்தனர். 2 கோடிக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திமுகவில் உறுப்பினராக இணைந்தனர். தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க “ஓரணியில் தமிழ்நாடு” எனும் மாபெரும் முன்னெடுப்பு தொடங்கப்பட்டது. ஜூலை 1ல் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான திமுக முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக நம் மண் மொழி மானம் காக்க, “ஓரணி­யில் தமிழ்­நாடு” எனும் மாபெரும் முன்னெடுப்பை திமுக தொடங்கியுள்ளது. இந்த ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் கடந்த 1ம் தேதி தொடங்கி வைத்தார். தொடர்ந்து 3ம் தேதி முதல் வீடு, வீடாக சென்று புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி தொடங்கியது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இல்லம் அமைந்துள்ள சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று உறுப்பினர் சேர்க்கை பணியை அவரே நேரடியாக மேற்கொண்டார். தொடர்ந்து அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், முன்னணியினர் அனைவரும் அவரவர் சொந்த வாக்குச்சாவடிகளில் இருக்கும் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று மக்களை சந்தித்து வருகின்றனர். ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது நேரடி கட்டுப்பாட்டில் நேரடியாக கண்காணித்து வருகிறார்.

இது குறித்து அடிக்கடி மாவட்ட செயலாளர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். அது மட்டுமல்லாமல் வெளிமாவட்டங்களுக்கு செல்லும் போதும் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையிலும் ஈடுபட்டு வருகிறார். அப்போது அரசின் நலத்திட்டங்கள் முறையாக சென்று சேர்கிறதா? என பொதுமக்களிடம் அவர் கேட்டறிந்தார். மேலும் ”ஓரணியில் தமிழ்நாடு” இயக்கத்தில் ஒன்றிணையுமாறு பொதுமக்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

திமுகவினரின் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. பிரசாரம் தொடங்கப்பட்ட 22 நாட்களில் 2 கோடிக்கும் அதிகமானோர் திமுகவில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.

இது குறித்து திமுக சமூக வலைத்தளம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ”ஓரணியில் தமிழ்நாடு” எனும் மாபெரும் முன்னெடுப்பை திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் குடும்பம் குடும்பமாக 2 கோடிக்கு மேற்பட்ட பொதுமக்கள் சமூகநீதியை காக்கும் ஜனநாயக பேரியக்கமான திமுகவில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.

The post ஓரணியில் தமிழ்நாடு மாபெரும் முன்னெடுப்பில் இதுவரை 2 கோடி பேர் இணைந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: