2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை!

2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை தரவுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையத்தை திறந்து வைத்து, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். இதற்காக மாலத்தீவில் இருந்து தனி விமானம் மூலம் இன்று இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு அளிக்கிறார்கள். பின்னர், ரூ.452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

பின்னர் விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு, ரெயில்வே துறையில் நிறைவேற்றப்பட்டுள்ள ரூ.1,030 கோடி மதிப்பிலான பணிகள், நெடுஞ்சாலைத்துறையால் முடிக்கப்பட்டுள்ள ரூ.2, 571 கோடி மதிப்பிலான பணிகள், ரூ.548 கோடி மதிப்பீட்டில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4-வது பிரிவில் மின்சாரத்தை வெளியேற்றுவதற்காக உள்ள மின் பரிமாற்ற அமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் என ரூ.4,800 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். இந்த விழா முடிந்த பிறகு தனிவிமானம் மூலம் பிரதமர் மோடி திருச்சி செல்கிறார்.

இரவு 10.30 மணி அளவில் திருச்சிக்கு வரும் பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.இதன்பிறகு பிரதமர் மோடி கார் மூலம் சென்று திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார். நாளை (ஞாயிற்றுகிழமை), அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடித் திருவாதிரை விழாவில் பங்கேற்று, ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தையும் பிரதமர் மோடி வெளியிடுகிறார். பிரதமர் மோடியின் தமிழக வருகையையொட்டி, அவரை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

The post 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை! appeared first on Dinakaran.

Related Stories: