சென்னை: சச்சுஸ் கிரியேஷன்ஸ் சார்பில் பவுலோஸ் ஜார்ஜ் தயாரித்துள்ள படம், ‘அகமொழி விழிகள்’. ஆதம் ஹசன், நேஹா ரத்னாகரன் ஜோடியாக நடித்துள்ளனர். மற்றும் தர்மஜன், நவோதயா ஷாஜு, குலப்புள்ளி லீலா, ராஜீவ் கண்ணன், சி.கே.ஆர், ஹரிதா, ராஷீ, தீபு நடித்துள்ளனர். சசீந்திரா கே.சங்கர் எழுதி இயக்கியுள்ளார். ஜஸ்பால் சண்முகம், ராஜேஷ், செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர். எஸ்.பி.வெங்கடேஷ் பின்னணி இசை அமைக்க, பாடல்களுக்கு ஜூபைர் முஹம்மது இசை அமைத்துள்ளார். வரும் மே 9ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேரரசு, மங்கை அரிராஜன், கே.ராஜன், ஆர்.கே.அன்பழகன், ஜாகுவார் தங்கம், திருச்சி தர் கலந்துகொண்டனர். படம் குறித்து சசீந்திரா கே.சங்கர் உருக்கமாக பேசியதாவது:
இசை நிகழ்ச்சிகளில் பாடும் ஒரு இளைஞன், தன் காதலிக்கு ஏற்பட்ட பிரச்னையை தீர்க்க போராடுகிறான்.
பார்வையில்லாத அவன் எதிரிகளை எப்படி பழிவாங்கினான் என்பது கதை. ரசிகர்களை இருக்கை நுனிக்கு கொண்டு வரும் திரில்லராக படம் உருவாகியுள்ளது. தயாரிப்பாளர் இல்லாமல் எதுவும் இல்லை. சினிமாதான் அனைத்து தரப்பு மக்களின் இணைப்புக்கு ஒரு பாலமாக இருக்கிறது. நான் மலையாளி. என் பாட்டி தமிழச்சி. என் வேர் தமிழ்தான். மலையாளம், கன்னடம், தெலுங்கு எல்லாமே தமிழில் இருந்து உருவான மொழிகள்தான். வந்தாரை வாழ வைப்பது தமிழ் மொழி. இப்படத்தை தமிழர்களாகிய உங்கள் கையில் கொடுத்துவிட்டோம், எங்களை வாழ வையுங்கள். என்னை இயக்குனராக்கியது தமிழ். இங்கு பல ஆண்டுகளாக பணியாற்றினேன். இந்த மொழி வாழ வைக்கும் என்ற நம்பிக்கையிலேயே இன்னும் நான் உயிர் வாழ்கிறேன்.