விமர்சனம் : தரைப்படை

அதிக வட்டி கொடுப்பதாக சொல்லி, பொதுமக்களிடம் இருந்து ₹1,000 கோடியை மோசடி செய்யும் ஒரு கும்பல், அப்பணத்தை உடனே தங்கம் மற்றும் வைரங்களாக மாற்றுகிறது. திடீரென்று அந்த கும்பலின் தலைவனை அட்டாக் செய்து தங்கத்தையும், வைரங்களையும் பிரஜின் கொள்ளையடிக்கிறார். பிறகு அவரிடம் இருந்து கொள்ளையடிக்க விஜய் விஷ்வா திட்டம் தீட்டுகிறார். மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட தனது குடும்பத்தினரை தேடி வரும் ஜீவா தங்கவேல், அந்த தங்கம் மற்றும் வைரங்களை கைப்பற்ற முயற்சிக்கிறார். மூவரின் வாழ்க்கையில் பயணிக்கும் ₹1,000 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைரங்களால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? யாருக்கு தங்கம் மற்றும் வைரங்கள் கிடைத்தது என்பது மீதி கதை.

தனது கேரக்டரை உணர்ந்து இயல்பாகவும், பரபரப்பாகவும் நடித்துள்ளார் பிரஜின். மும்பையில் இருந்து வந்து தனது குடும்பத்தினரை தேடும் ஜீவா தங்கவேல், ரஜினிகாந்த் ஸ்டைலில் நடித்திருக்கிறார். அப்பாவி போல் வந்து, அட பாவியாக மாறி, விஜய் விஷ்வா வில்லத்தனம் செய்துள்ளார். படம் முழுக்க பிரஜின், ஜீவா தங்கவேல், விஜய் விஷ்வா ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். மற்றவர்களும் இயக்குனர் சொன்னதை செய்துள்ளனர்.

படம் முழுக்க சேஸிங் மற்றும் சண்டை காட்சிகள் இருக்கின்றன. அக்காட்சிகளில் ஒளிப்பதிவாளர் சுரேஷ் குமார் சுந்தரம் கடுமையாக உழைத்துள்ளார். மனோஜ் குமார் பாபு இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது. மிரட்டல் செல்வாவின் சண்டை பயிற்சியும், ராம்நாத்தின் எடிட்டிங்கும் குறிப்பிடத்தக்கது. எழுதி இயக்கிய ராம் பிரபா, முழுநீள கமர்ஷியல் ஆக்‌ஷன் கதையை எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறார். தங்கம் மற்றும் வைரங்கள் இறுதியில் யாருக்கு கிடைத்தது என்பது யூகிக்க முடியாத திருப்பம். பட உருவாக்கத்தில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.

Related Stories: