திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான எம்புரான் படம் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை ஆன்டனி பெரும்பாவூர் மற்றும் கோகுலம் கோபாலன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் 2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
மேலும் ஒன்றிய விசாரணை அமைப்புகளின் நடவடிக்கைகள், பாஜ மற்றும் இந்துத்துவ அமைப்புகள் குறித்து விமர்சிக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ மற்றும் சங்பரிவார் அமைப்பினர் கேரளாவில் போராட்டம் நடத்தினர். படத்தில் சர்ச்சைக்குள்ளான காட்சிகளை நீக்க வேண்டும் என்று மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இதையடுத்து எம்புரான் படத்தில் 24 காட்சிகள் வெட்டப்பட்டு தற்போது திரையிடப்பட்டு வருகிறது.
ஒன்றிய பாஜ அரசை விமர்சித்து காட்சிகள் இடம்பெற்றிருந்ததால் விரைவில் எம்புரான் படத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக ஒன்றிய விசாரணை அமைப்புகளின் நடவடிக்கை பாயும் என்று பரவலாக கூறப்பட்டு வந்தது. இதை உறுதிப்படுத்தும் வகையில் பிருத்விராஜுக்கு வருமான வரித்துறை நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுவரை பிரித்விராஜ் நடித்த மற்றும் தயாரித்த படங்கள் மூலம் கிடைத்த வருமானம் குறித்த விவரங்களை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என்று அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.