பெப்சி அமைப்புடன் தயாரிப்பாளர்கள் மோதல்: திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு தொடக்கம்

சென்னை: தமிழ்ப் படவுலகில் 23 சங்கங்கள் இணைந்துள்ள ‘பெப்சி’ (FEFSI) என்கிற ‘தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்’ (Film Employees Federation of South India) என்ற அமைப்பு இயங்கி வருகிறது. தற்போது இந்த அமைப்புக்கும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் இடையே தொழிலாளர்கள் சம்பள உயர்வு உள்பட பல்வேறு விஷயங்களில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அளித்த பேட்டியில், ‘எங்களை அழிக்க புதிதாக ஒரு அமைப்பை உருவாக்க முயற்சிக்கின்றனர். அதற்கு நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம். வரும் 8ம் தேதி முதல் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுடன் பணிபுரிய மாட்டோம்’ என்று சொல்லியிருந்தார். இந்நிலையில், ‘டான்டெப்’ (TANTEF) என்கிற ‘தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு’ (TamilNadu Thiraipada Employees Federation) என்ற புதிய அமைப்பை, ‘பெப்சி’ அமைப்புக்கு மாற்றாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கியுள்ளது.

இதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. இதுகுறித்து சங்க தலைவர் என்.ராமசாமி என்கிற முரளி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தை எங்களுடன் சேர்ந்து ஒரே சங்கமாக செயல்பட பலமுறை கேட்டும் அவர்கள் செவிசாய்க்கவில்லை. அந்த சங்கத்துடன் பெப்சி அமைப்பு சேர்ந்துள்ளது. எனவே, புதிய அமைப்பை தொடங்கியுள்ளோம்.

பெப்சி அமைப்பிலுள்ள எந்த சங்கத்தின் அங்கத்தினர் வேண்டுமானாலும் இதில் சேரலாம். குறைந்த கட்டணம் செலுத்தினால் போதும். புது திறமைசாலிகளுக்கும், விஷூவல் கம்யூனிகேஷன் படித்தவர்களுக்கும் முன்னுரிமை தரப்படும். இன்றைய சூழலில் தயாரிப்பாளர்கள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். படங்கள் தயாரித்து பலத்த நஷ்டத்தை சந்திக்கின்றனர். 1,500க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களின் பாதுகாப்புக்காகவும், நலனுக்காகவும் புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

Related Stories: