ஐதராபாத்: தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. இந்நிலையில், ஐதராபாத் பல்கலைக்கழக வளாகத்துக்கு அருகில் காஞ்சா கச்சிபவுலியில் இருக்கும் 400 ஏக்கர் நிலத்தை மறுசீரமைப்பு செய்யும் நோக்கத்தில், ஐடி பூங்கா ஒன்றை அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதற்கு நடிகை ராஷ்மிகா மந்தனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்த விஷயத்தை இப்போதுதான் நான் பார்த்தேன். மனம் உடைந்துவிட்டது. இது சரியில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். அதனுடன், உடைந்த இதய ஈமோஜியையும் பதிவிட்டுள்ளார். தொடர்ந்து மோடியை பாராட்டி தனது இன்ஸ்டாகிராமில் பதிவுகள் போடும் ராஷ்மிகா, இந்த திட்டத்தை எதிர்ப்பதற்கு பாஜவின் தூண்டுதலே காரணம் என தெலங்கானா காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.