இதையடுத்து பாஜ மற்றும் இந்துத்துவ கட்சிகள் தரப்பிலிருந்து படக்குழுவுக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. உடனே இதற்காக மோகன்லால் மன்னிப்பு கேட்டார். அத்துடன் படத்தில் இடம்பெற்ற குஜராத் கலவர காட்சிகள் உள்பட இந்துத்துவ கட்சிகளை விமர்சிக்கும் 23 காட்சிகள் வரை நீக்கப்பட்டன. அதே சமயம், இதே படத்தில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக சர்ச்சைக்குரிய வசனங்களும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அவை அனைத்தும் தமிழ்நாட்டின் உரிமையை கேள்வி கேட்கும் விதமாக தமிழர்களை புண்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.
படத்தில் மஞ்சுவாரியர் ஒரு காட்சியில், ‘நாம் பிறப்பதற்கு முன்பே, ஒரு ராஜா பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு அஞ்சியதால், 999 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்து, நெடும்பள்ளி அணை கட்டப்பட்டது. ராஜாக்களும் ஆக்கிரமிப்பு சக்திகளும் நாட்டை விட்டு சென்ற பின்பும், இன்றும் ஜனநாயகத்தின் பெயரில் நம்மை அடக்கி ஆளுகிறார்கள். இந்த அணையின் அபாயத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்கிற வசனம் இடம்பெற்றுள்ளது. ‘அணையை காப்பாற்ற தற்காலிகச் சுவர்களால் பயன் இல்லை. அணையே இல்லாமல் இருப்பதே சிறந்த தீர்வு’ என்கிற வசனமும் அதில் இடம் பெற்றுள்ளது. மேலும் இதுபோன்ற சில வசனங்களால் இரு மாநில விவசாயிகளுக்கும் இடையே பிரச்னை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக கூறி, மதுரை, தேனி மாவட்டங்களில் பல பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
நேற்றும் கம்பத்தில் பொதுப்பணித்துறை அலுவலகம் முன் திரண்ட விவசாய சங்கத்தினர் ஊர்வலமாக காந்திசிலை அருகே உள்ள கோகுலம் சிட்பண்ட்ஸ் அலுவலகம் நோக்கி வந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பென்னிகுக் பாலசிங்கம், ‘‘அணை உடையாது வலுவாக இருக்கிறது என உச்சநீதிமன்றமே பலமுறை தெளிவுபடுத்திவிட்டது. ஆனால் எம்புரான் படத்தில் அணை உடையும் மக்களுக்கு ஆபத்து என்ற வசனங்கள் இடம்பெற்றிருக்கிறது. இதுபோல பல இடங்களில் முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக வசனங்கள் வைக்கப்பட்டுள்ளன. படத்தின் தயாரிப்பாளர் கோகுலம் சிட்பண்ட்ஸ் உரிமையாளர் தான். அவர் தமிழகத்தில் பல கிளைகளை நடத்தி வருகிறார்.
இந்தக் கிளைகளில் இருந்து மட்டும் ஆண்டுக்கு 8 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டக்கூடிய நிறுவனமாக உள்ளது. ஆனால் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கோபாலன், தமிழகத்துக்கு எதிராக படம் எடுத்திருக்கிறார். இதுபோல கேரளாவுக்கு எதிராக ஒரு படத்தை தமிழகத்தில் எடுத்து கேரளாவில் திரையிட முடியுமா? எம்புரான் படத்தில் அணைக்கு எதிராக உள்ள காட்சிகளை நீக்காவிட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனங்கள் முன் விவசாய சங்கங்கள் மட்டுமில்லாது அரசியல் கட்சியினர், பிற அமைப்பினரை சேர்த்து முற்றுக்கை போராட்டங்களை நடத்துவோம். படக்குழு தமிழக விவசாயிகளிடம் மன்னிப்புக் கோர வேண்டும். இல்லையெனில் தமிழக அரசு எம்புரான் படத்திற்கு தடைவிதிக்க வலியுறுத்துவோம்’’ என்றார். பாஜவுக்கு பயந்து உடனே குஜராத் கலவர காட்சிகளை நீக்கியது, மோகன்லால் அவசர அவசரமாக மன்னிப்பு கேட்டது என பணிந்துபோன ‘எம்புரான்’ படக்குழு, தமிழக விவசாயிகளின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.