சினிமா, கிரிக்கெட்டை தொடர்ந்து மகனுடன் சேர்ந்து மது விற்பனை தொழிலில் ஈடுபட்ட ஷாருக்கான்

மும்பை: பாலிவுட் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ஷாருக்கான், திரைப்படங்களில் நடிப்பது மற்றும் தயாரிப்பது போன்ற துறைகளை தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட் துறையிலும் ஈடுபட்டு வருகிறார். இத்தொழில்கள் அனைத்திலும் அவர் வெற்றிகரமாக பயணித்து வருகிறார். தற்போது அவர் மதுபான விற்பனை தொழிலில் ஈடுபட்டுள்ளார். இதில் அவரது மகன் ஆர்யன் கானையும் பங்குதாரராக இணத்துள்ளார். டி’யாவோல் என்ற பிராண்டில் மது வகைகளை ஷாருக்கான் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறார்.

கடந்த ஆண்டு மகனுடன் சேர்ந்து இத்தொழிலில் ஈடுபட்டார். அதற்குள் அவரது பிராண்ட் மதுபானங்கள் சர்வதேச அளவில் பிரபலமாகி விட்டது. ஜெர்மனியிலுள்ள பெர்லின் நகரில் சர்வதேச மது போட்டி நடந்தது. இதில் ஷாருக்கான் நிறுவனத்தின் மது வகைகள் பார்வைக்கு வைக்கப்பட்டன. இதில் ஷாருக்கானின் கம்பெனி மது வகைகள் 100க்கு 95 சதவீத புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றது. இந்த ஆண்டு மட்டுமின்றி, கடந்த ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த சர்வதேச மது போட்டியில், ஷாருக்கானின் டி’யாவோல் பிராண்ட் ஸ்காட்ச் விஸ்கி சிறந்த பிராண்ட் மதுபானம் என்ற விருதை வென்றது.

ஷாருக்கான் நிறுவனம் 3 வகையான மது வகைகளை விற்பனை செய்து வருகிறது. இதில் டி’யாவோல் சிங்கிள் எஸ்டேட் வோட்கா ஒரு பாட்டில் 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. விஸ்கி ஒரு பாட்டில் 6,300 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த வகை டி’யாவோல் பிரீமியம் ஸ்காட்ச் விஸ்கி மகாராஷ்டிராவில் 5,350 ரூபாய்க்கும், கோவாவில் 4,500 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

ஏற்கனவே ஷாருக்கான் பல்வேறு பொருட்களின் பிராண்ட் விளம்பரங்களில் நடித்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். அவர் குட்கா விளம்பரத்தில் நடிக்க சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், ‘குட்கா தயாரிப்பதை நிறுத்துங்கள். என்னை வேலை செய்யவிடாமல் தடுக்காதீர்கள்’ என்று சொல்லி, குட்கா விளம்பரத்தில் நடிப்பதை ஷாருக்கான் நிறுத்த மறுத்துவிட்டார்.

Related Stories: