நடிகர்களிடம் நஷ்டஈடு கேட்கும் மலையாளப் பட தயாரிப்பாளர்கள்: 700 கோடி ரூபாய் வரை இழப்பு

திருவனந்தபுரம்: மலையாளத்தில் இந்த ஆண்டில் வெளியான ‘பிரமயுகம்’, ‘மஞ்சும்மல் பாய்ஸ்’, ‘ஆடுஜீவிதம்’, ‘ஆவேஷம்’, ‘வர்ஷங்களுக்கு ஷேஷம்’, ‘பிரேமலு’, ‘ஆட்டம்’, ‘குருவாயூர் அம்பலநடையில்’, ‘உள்ளொழுக்கு’, ‘வாழ’, ‘ஏஆர்எம்’, ‘கிஷ்கிந்தா காண்டம்’ போன்ற படங்கள் ஹிட்டானது. இவற்றில் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’, ‘ஆடுஜீவிதம்’, ‘ஆவேஷம்’, ‘பிரேமலு’, ‘ஏஆர்எம்’ போன்ற படங்கள் 100 கோடி ரூபாய் வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்தன. ‘வர்ஷங்களுக்கு ஷேஷம்’, ‘குருவாயூர் அம்பலநடையில்’, ‘கிஷ்கிந்தா காண்டம்’ போன்ற படங்கள் ₹50 கோடி வசூலித்தன. மோகன்லாலின் ‘மணிச்சித்ரதாழ்’, ‘தேவ தூதன்’ போன்ற படங்கள் ரீ-ரிலீஸ் ஆனது.

இந்நிலையில், இந்த ஆண்டு மலையாளப் படவுலகிற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நடிகர்கள் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டஈடு தந்து உதவ வேண்டும் என்றும் கேரள திரைப்பட தயாரிப் பாளர்கள் சங்கம் கேட்டுள்ளது. இதுபற்றி வெளியான அறிவிப்பில், ‘2024ல் வெளியான 199 படங்களில், 26 படங்கள் வசூல்ரீதியாக வெற்றிபெற்றன. 199 படங்களுக்கான 1,000 கோடி ரூபாய் தயாரிப்பு செலவில், 300 கோடி ரூபாய் மட்டுமே லாபம் கிடைத்துள்ளது. மீதியுள்ள 700 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், தயாரிப்பாளர்கள் மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர். நஷ்டம் அடைந்த படங்களின் நடிகர்களும், உதவி செய்ய முன்வரும் நடிகர்களும் தயாரிப்பாளர்களின் நஷ்டத்தை ஈடு செய்ய உதவ வேண்டும். இல்லை என்றால், தயாரிப்பாளர்களின் நிலை கவலைக்கிடமாகிவிடும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: