நடிகை பலாத்கார வழக்கில் திலீப்புக்கு எதிராக சாட்சி சொன்ன டைரக்டர் திடீர் மரணம்

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப்புக்கு எதிராக முக்கிய சாட்சியம் அளித்து பரபரப்பை ஏற்படுத்திய டைரக்டர் பாலச்சந்திர குமார் இன்று காலை மரணமடைந்தார். கேரள மாநிலத்தில் கடந்த 2017ம் ஆண்டு பிரபல மலையாள நடிகை கடத்தி காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சதித் திட்டம் தீட்டியதாக மலையாள முன்னணி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

85 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் நடிகை பலாத்காரம் செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய பென் டிரைவ் நடிகர் திலீப்பிடம் இருப்பதாகவும், அவர் உள்பட சிலர் அதை பார்க்கும்போது நான் அருகில் இருந்தேன் என்றும் மலையாள டைரக்டர் பாலச்சந்திர குமார் கூறியது இந்த வழக்கில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. மேலும் பலாத்கார வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகளை கொல்ல திலீப் சதித்திட்டம் தீட்டி வருவதாகவும் அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் மறு விசாரணை நடத்த கேரள உயர் நீதிமன்றத்தில் போலீசார் அனுமதி கோரினர். இதை ஏற்றுக் கொண்ட கேரள உயர் நீதிமன்றம் நடிகை பலாத்கார வழக்கில் மறு விசாரணை நடத்த அனுமதி வழங்கியது. இதன்படி கடந்த இரு வருடங்களாக இந்த வழக்கில் மறு விசாரணை நடைபெற்று வந்தது. பல சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது.

டைரக்டர் பாலச்சந்திர குமாரும் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். இந்நிலையில் இவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து பாலச்சந்திர குமார் செங்கணூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பாலச்சந்திர குமார் நேற்று அதிகாலை மரணமடைந்தார்.

Related Stories: