பரத்தை காதல் திருமணம் செய்த சினிக்கு சிறுநீரகங்கள் செயலிழக்கிறது. ரூ.15 லட்சம் இருந்தால் அவரைக் காப்பாற்ற முடியும். கணவரால் கைவிடப்பட்ட துப்புரவுப் பணியாளர் அபிராமி, வாங்கிய கடனைக் கட்ட முடியாததால் குண்டர்களால் மிரட்டப்படுகிறார். சாதிவெறி பிடித்த பத்திரிகை ஆசிரியர் தலைவாசல் விஜய்யின் மகள் பவித்ரா லட்சுமி, பெற்றோரை மீறி வேறு சாதி இளைஞனை ரிஜிஸ்டர் மேரேஜ் செய்கிறார்.
மகனைப் பற்றிய உண்மையை மறைத்து, அவருக்கு அஞ்சலி நாயரை திருமணம் செய்து வைக்கும் அருள் டி.சங்கர், பொற்கொடி தம்பதி, பரம்பரை சொத்துகளுக்கு வாரிசு வேண்டும் என்பதற்காக, மருமகளை தவறான வழிக்கு கட்டாயப்படுத்துகின்றனர். இந்த 4 கதைகளுக்கும் ஒரு கைத்துப்பாக்கி லிங்க். அது யாருக்கு, எப்படி கிடைத்தது? பின்விளைவுகள் என்ன என்பது மீதி கதை. படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறார் இயக்குனர் பிரசாத் முருகன்.
அவருக்கு ஒளிப்பதிவாளர்கள் கே.எஸ்.காளிதாஸ், ஆர்.கண்ணன் நல்ல ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். ஜோஸ் பிராங்க்ளின் பின்னணி இசை கச்சிதம். எம்.ஜெகன் கவிராஜின் வசனமும், பாடல்களும் பக்க பலம். அபிராமி, திருநங்கை போர்ஷன் மனதை பதைபதைக்க வைக்கிறது. பரத் எமோஷனலாக நடித்துள்ளார். அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி, தலைவாசல் விஜய், ராஜாஜி, ஷான், கல்கி, பிஜிஎஸ், அரோல் டி.சங்கர் ஆகியோர் இயல்பாக நடித்துள்ளனர். 4 கதைகளிலும் போலீசாரின் முடிவு பற்றி சொல்லாதது ஏனோ?