தில்ராஜு, ஆதித்யாராம் இணையும் பான் இந்தியா படங்கள்: முதல் கட்டமாக ராம் சரணின் கேம் சேஞ்சர்

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியரா அத்வானி நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படம் ஜனவரியில் ரிலீசாகிறது. இந்நிலையில் இப்படத்தை தயாரித்துள்ள தில் ராஜு, தனது அடுத்த படங்கள் தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் பேசினார். ‘கேம் சேஞ்சர்’ படத்தைத் தொடர்ந்து அதிக தமிழ் திரைப்படங்கள் மற்றும் பான் இந்தியா திரைப்படங்களை இணைந்து தயாரிக்க உள்ளதாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா மூவிஸ் மற்றும் ஆதித்யாராம் மூவிஸ் இணைந்து அறிவித்துள்ளன. இந்த கூட்டணி முதல் முறையாக ‘கேம் சேஞ்சர்’ படத்திற்காக இணைந்துள்ளது. இது தொடர்பான நிகழ்வில் தயாரிப்பாளர்கள் தில் ராஜூ மற்றும் ஆதித்யாராம் கலந்து கொண்டனர். தில் ராஜூ பேசும்போது, ‘21 ஆண்டுகால பயணத்தில் இது எனது 50வது திரைப்படம் ஆகும்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் ஷங்கர் என்னிடம் கூறிய கதைக்களம் எனக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. எப்போதுமே ஷங்கர் படங்கள் விசேஷமாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். விசேஷ தீம் மட்டுமின்றி ‘கேம் சேஞ்சர்’ படத்தில் ஏராளமான பொழுதுபோக்கு விஷயங்களும் உள்ளன. நாங்கள் தமிழ் மற்றும் பான் இந்தியன் திரைப்படங்களிலும் இணைந்து பணியாற்ற இருக்கிறோம்’ என்றார். ஆதித்யாராம் பேசும்போது, ‘பிரபாஸ் நடித்த படம் உள்பட நான்கு தெலுங்கு திரைப்படங்களை தயாரித்துள்ளேன். நாங்கள் பிரமாண்ட படங்களை இணைந்து உருவாக்க உள்ளோம். தற்போது சரியான இயக்குனர்கள் மற்றும் கதைகளை தேர்வு செய்து வருகிறோம். விரைவில் அறிவிப்புகள் வரும்’ என்றார்.

Related Stories: