மீன்பிடி திருவிழாவில் கிராமமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே குண்டேந்தல்பட்டியில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் மீன்களை பிடித்தனர்.

திருப்புத்தூர் வட்டார பகுதி கிராமங்களில் உள்ள கண்மாய்களில் நீர் இருப்பு குறைந்து வருவதால், மீன்பிடித் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. பல இடங்களில் அழிகண்மாய் என்ற பெயரில் இலவசமாகவும், சில இடங்களில் ஊத்தா குத்துதல் என்ற பெயரில் கட்டணம் வசூலித்தும் மீன் பிடிக்க அனுமதிப்பார்கள்.

இந்நிலையில், நேற்று முன்தினம் திருப்புத்தூர் அருகே குண்டேந்தல்பட்டியில் உள்ள பிராமணக் கண்மாயில் அழிகண்மாய் என்ற பெயரில் இலவசமாக பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் திருக்கோஷ்டியூர், எஸ்.எஸ்.கோட்டை, சுண்ணாம்பிருப்பு, திருக்களாம்பூர், மதகுபட்டி, ஏரியூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகை தந்த 800க்கும் மேற்பட்டோர் இந்த மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்டு ஆர்வத்துடன் மீன்களை பிடித்தனர்.

இதில் தாங்கள் கொண்டு வந்திருந்த ஊத்தா, கொசுவலை, மீன்பிடி வலை, அரி கூடை, கச்சா உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் மூலம் சிறுவர்கள், பெண்கள் என பலரும் ஆர்வத்துடன் மீன்களைப் பிடிக்க ஆரம்பித்தனர். இதில் ஜிலேபி, குரவை, விரா உள்ளிட்ட நாட்டு வகை மீன்கள் கிடைத்தன.

The post மீன்பிடி திருவிழாவில் கிராமமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: