சென்னை : தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ள 30 முக்கிய ரயில்களில் ஓடிபி தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே துறை பயணிகளின் வசதியையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு தொடர்ந்து புதிய தொழில்நுட்ப மாற்றங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தெற்கு ரயில்வேயின் கீழ் இயக்கப்படும் 30 முக்கிய அதிவேக மற்றும் பிரீமியம் ரயில்களில் “ஓடிபி (ஒன் டைம் பாஸ்வேர்ட்) உறுதிப்படுத்தப்பட்ட தட்கல் முன்பதிவு” வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய வசதி கடந்த டிசம்பர் 3 முதல் சில ரயில்களிலும், டிசம்பர் 4 முதல் மீதமுள்ள ரயில்களிலும் அமலுக்கு வந்துள்ளது. தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, பயணி பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி அனுப்பப்படும். அதை உள்ளிட்டு உறுதிப்படுத்தினால்தான் முன்பதிவு முழுமையடையும். இதன் மூலம் போலி முகவர்கள் அல்லது ஏஜெண்டுகள் மூலம் நடக்கும் போலி முன்பதிவுகள் தடுக்கப்படும். உண்மையான பயணிகளுக்கு தட்கல் டிக்கெட் எளிதில் கிடைக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தட்கல் முன்பதிவு என்பது ரயில் பயண தேதிக்கு ஒரு நாள் முன்பு (ஏசி வகுப்புக்கு காலை 10 மணி, பொது வகுப்புக்கு 11 மணி) தொடங்கும் அவசர முன்பதிவு ஆகும். இதில் போட்டி அதிகம் இருப்பதால், பலர் டிக்கெட் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். ஓடிபி உறுதிப்படுத்தல் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வசதி கொண்டுவரப்பட்ட ரயில்கள் பெரும்பாலும் வந்தே பாரத், சதாப்தி, துரோந்தோ, ராஜ்தானி, தேஜாஸ் போன்ற அதிவேக மற்றும் பிரீமியம் ரயில்களாகும். இவை சென்னை, கோயம்புத்தூர், மைசூரு, திருவனந்தபுரம், மங்களூரு, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கின்றன.
பயணிகள் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் இந்த ரயில்களுக்கு தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஓடிபி உறுதிப்படுத்தலை கவனத்தில் கொள்ள வேண்டும். சரியான மொபைல் எண்ணை பதிவு செய்யுங்கள். ஏதேனும் சந்தேகம் இருந்தால் ரயில்வே உதவி எண் 139-ஐ தொடர்பு கொள்ளலாம்.இந்த மாற்றம் பயணிகளிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
* இந்த ரயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஓடிபி கட்டாயம்
மைசூரு சதாப்தி-சென்னை, சென்னை-பெங்களூரு சதாப்தி, எர்ணாகுளம்-மும்பை துரோந்தோ, சென்னை-கோயம்புத்தூர் சதாப்தி, கோயம்புத்தூர்-சென்னை சதாப்தி, சென்னை-டெல்லி துரோந்தோ, எர்ணாகுளம்-டெல்லி துரோந்தோ, திருவனந்தபுரம் ராஜ்தானி, சென்னை-டெல்லி ராஜ்தானி, சென்னை-மைசூரு வந்தே பாரத், சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத், நாகர்கோவில்-சென்னை வந்தே பாரத், மங்களூரு-திருவனந்தபுரம் வந்தே பாரத்,
திருவனந்தபுரம்-மங்களூரு வந்தே பாரத், காசரகோடு-திருவனந்தபுரம் வந்தே பாரத், திருவனந்தபுரம்-காசரகோடு வந்தே பாரத், கோயம்புத்தூர்-பெங்களூரு வந்தே பாரத், சென்னை-கோயம்புத்தூர் வந்தே பாரத், கோயம்புத்தூர்-சென்னை வந்தே பாரத், சென்னை-மைசூரு வந்தே பாரத், சென்னை-தென்காசி வந்தே பாரத், தென்காசி-சென்னை வந்தே பாரத், சென்னை-விஜயவாடா வந்தே பாரத், சென்னை-திருவனந்தபுரம் , திருவனந்தபுரம்-சென்னை , சென்னை-மதுரை தேஜாஸ், மதுரை-சென்னை தேஜாஸ்
