சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: காப்பீட்டுத் துறையில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்கும் வகையில் காப்புறுதி சட்டங்களைத் திருத்தும் மசோதா கொண்டு வரப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார். இதன் மூலம் இந்திய ஆயுள் காப்பீட்டுத் துறையின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கப்படும். எல்ஐசி வீழ்ச்சிக்குத் தள்ளப்படும்.
தனியார்மயமாக்கலின் விளைவாக இந்திய விமானச் சேவை கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முடங்கிக் கிடக்கிறது. இந்தியா பல்வேறு துறைகளில் பல்வேறு நெருக்கடிகளை எதிர் கொண்டிருக்கும் இத்தகைய சூழ்நிலையில் வருமானம் சிறப்பாக வந்து கொண்டிருக்கும் காப்பீடு துறையில் அன்னிய முதலீடுகளை அனுமதிப்பது பாதுகாப்பானது அல்ல. எனவே ஒன்றிய அரசு இந்த நடவடிக்கையைக் கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
