யுடிடி டேபிள் டென்னிஸ் யு மும்பா சாம்பியன்

அகமதாபாத்: இந்தியன் ஆயில் யுடிடி சீசன் 6 டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில், யு மும்பா அணி அபார வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இந்தியன் ஆயில் யுடிடி சீசன் 6 டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடந்து வந்தன. இதன் இறுதிப் போட்டியில் யு மும்பா டிடி அணியும், ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியும் மோதின. முதலில் நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் மும்பா அணியின் லிலியன் பார்டெட் 2-1 என்ற செட் கணக்கில் வென்றார். 2வதாக நடந்த மகளிர் ஒற்றையர் போட்டியில் யு மும்பா அணியின் பெர்னாடெட் சாக்ஸ் (ருமேனியா), ஜெய்ப்பூர் அணியின் ஜா அகுலாவுடன் மோதினார்.

இதில், மும்பா அணி வீராங்கனை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். 3வதாக நடந்த கலப்பு இரட்டையர் போட்டியில் யுமும்பா அணியின் பெர்னாடென் சாக்ஸ், ஆகாஷ் பால் ஜோடி 3-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. 4வதாக நடந்த ஆடவர் ஒற்றையர் போட்டியில், யுமும்பா அணியின் அபிநந்த் பிபியுடனான போட்டியில் ஜெய்ப்பூர் அணி வீரர் ஜீத் சந்திரா 11-5 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். தொடர்ந்து, 2வது செட்டையும் 11-8 என்ற கணக்கில் அவர் வசப்படுத்தினார். கடைசி செட்டில், அபிநந்த், 11-8 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதையடுத்து, 8-4 என்ற கணக்கில் யு மும்பா அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக தட்டிச் சென்றது. யு மும்பா அணிக்காக ஆடிய அபிநந்த் சென்னை திருவான்மியூரை சேர்ந்தவர். சாம்பியன் பட்டம் வென்ற யுமும்பா அணிக்கு வெற்றிக் கோப்பையுடன், ரூ.60 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 2வது இடம் பிடித்த ஜெய்ப்பூர் அணிக்கு, ரூ.40 லட்சம் பரிசுத் தொகை கிடைத்தது.

The post யுடிடி டேபிள் டென்னிஸ் யு மும்பா சாம்பியன் appeared first on Dinakaran.

Related Stories: