பாமக நிறுவனரான எனக்கே கட்டளையிட இவர் யார்? மூச்சுக் காற்று நிற்கும் வரை நான் தான் தலைவர்: அன்புமணியை பார்த்தாலே பிபி ஏறுகிறது, ராமதாஸ் மீண்டும் விளாசல்

திண்டிவனம்: கட்சியின் நிறுவனரான எனக்கே கட்டளையிட இவர் யார்? அன்புமணியை பார்த்தாலே எனக்கு பிபி ஏறுகிறது. எனது மூச்சு காற்று நிற்கும் வரை பாமகவுக்கு நான் தான் தலைவர் என ராமதாஸ் மீண்டும் அன்புமணியை சகட்டுமேனிக்கு விளாசி தன் உள்ளக்குமுறல்களை கொட்டி தீர்த்துள்ளார். பாமக நிறுவனரான ராமதாசுக்கும், மகனும் செயல் தலைவருமான அன்புமணிக்கும் ஏற்பட்டுள்ள அதிகார மோதல் தீராத அளவுக்கு முற்றியுள்ளது.

இரு தரப்பும் தனித்தனியாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில், கட்சியில் இருந்த 55 மாவட்ட செயலாளர்கள், 33 மாவட்ட தலைவர்கள், மாநில மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகளை மாற்றி புதிய நிர்வாகிகளை நியமித்து ராமதாஸ் அதிரடி காட்டினார். ஆனால், நீக்கப்பட்டவர்கள் பொறுப்பில் தொடர்வார்கள் என்று அன்புமணி உத்தரவிட்டார். கடந்த மாதம் 29ம் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்த ராமதாஸ், அன்புமணியை 35 வயதில் மத்திய அமைச்சராக்கி தப்பு செய்துவிட்டேன் என்று ஏகப்பட்ட மனக்குமுறல்களை கொட்டித்தீர்த்தார்.

இதன்பின் நடந்த ராமதாஸ்-அன்புமனி சந்திப்பு, பாஜ தூதர்கள் சமரச பேச்சு, குடும்பத்தினர் பஞ்சாயத்து என எல்லாமே தோல்வியில் முடிந்ததால், தனது ஆட்டத்தை ராமதாஸ் மீண்டும் தொடங்கினார். நேற்று முன்தினம் மீண்டும் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நிர்வாகிகளை சந்திக்க விடாமல் என்னை அன்புமணி மானபங்கப்படுத்தி விட்டார், கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிட்டார், குலசாமி என்று கூறி நெஞ்சில் குத்தினார் என மனம் நொந்து போய் கூறிய ராமதாஸ் என்னுள் இருக்கின்ற இயற்கையான கோபம் கொஞ்சம் பொங்கி எழுந்து நீயா.. நானா… என பார்த்து விடுவோம் என்ற நிலைக்கு வந்துவிட்டதாக ஆவேசமாக கூறியிருந்தார்.

மேலும், 2026 சட்டசபை தேர்தலை நானே பாமகவில் முன்னின்று கவனிப்பேன் என ராமதாஸ் உறுதியாக கூறினார். இந்நிலையில் நேற்று மீண்டும் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் மீண்டும் அன்புமணி மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை கூறினார். அப்போது அவர் கூறியதாவது: நீ (அன்புமணி) செயல் தலைவராக இரு. அதற்கு அவர் என்ன சொல்லணும். எல்லா நிருபர்களையும் கூட்டி என்னை செயல்தலைவராக இருக்க ராமதாஸ் எனக்கு உத்தரவு போட்டிருக்கிறார்.

செயல் தலைவராக இருந்தாலும் சரி, அதுவும் இல்லன்னாலும் நான் ஒரு சராசரி தொண்டனாக இருந்து ராமதாஸ் இடுகின்ற கட்டளையை செய்வேன் என்று சொன்னால் என் மனசு எப்படி இருக்கும், இல்லையா?. இன்னொரு விஷயமும் சொல்வார்கள். நேற்றும் சொன்னேன். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை… அப்படி சொன்னோம்னா… அதெல்லாம் பொய் அப்படின்னு (அன்புமணி) சொல்வாரு. இது இன்று நேற்று வார்த்தை அல்ல. பழமொழி அல்ல. பழைய மொழி.

இன்னொரு வார்த்தையும் பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். மூத்தோர்கள் சொல், வார்த்தை அமிர்தம். இதெல்லாம் சொன்னோம்னா… அதெல்லாம் பொய் என்று சொல்லக்கூடிய நபர் (அன்புமணி). இதற்கெல்லாம் ஒரே தீர்வு, நான் செயல் தலைவராக ஏற்றுக் கொள்கிறேன். ராமதாஸ் வழியில் நான் போறேன் என்பதுதான். இப்ப போய் நீங்கள் கேட்டீர்கள் என்றால் ஆமா… நான் போவேன்தான்… செய்வேன்தான் என்று சொல்வாரே தவிர… நடப்பதெல்லாம் வேற மாதிரி இருக்கும்.

அதனால் இன்று ஒட்டுமொத்த மக்கள், பாமக தொண்டர்கள், பாட்டாளி சொந்தங்களே என்று சொல்லும்போது எனக்கு ஏற்படுகிற பூரிப்பு, ஆனந்தம் சொல்லி மாளாது. ஆனால் இவரை (அன்புமணி) பார்க்கும்போது ஏற்படுகிற அதிர்ச்சி, மனக்குமுறல்கள், எனக்கு பிபி (ரத்த கொதிப்பு) ஏறுது. நான் சேலம் போய் இருக்கும்போது அங்கே இதேமாதிரி பிபி ஏறி, அப்புறம் டாக்டர் சரவணன் இசிஜி எடுத்து 10 பேரை கொண்டுவந்து என்னை டெஸ்ட் பண்ணினார்கள்.

இந்த மாதிரி கட்சியை உருவாக்கிய என்னை மைக் வைத்து பேசக் கூடாது தர்மபுரியில, சேலத்துல என்று, நானும் வருவேன்… வரவேண்டாம்னு நான் சொல்லல்ல.. ஆனா, 200 பேருக்குமேல் கூடக் கூடாது, என்னை தொண்டர்கள் பார்க்க வேண்டுமென்றால் அவர் தங்கியிருக்கும் அறையில்தான் போய் பார்க்கணும் என்றெல்லாம் கட்டளை. யார் இவர்?. கட்சியின் நிறுவனருக்கே இப்படி கட்டளையிடும் அதிகாரம் நான் கொடுக்கவில்லையே. அதனால நான் உங்கள் மூலமாக சொல்லும் செய்தி என் மூச்சுக் காற்று நிற்கும் வரை நான் தான் நிறுவனர், தலைவர். இந்த கட்சியின் தலைவர் நான்தான். இவ்வாறு அவர் கூறினார்.

* தஞ்சை, திருவாரூருக்கு புதிய நிர்வாகிகள்
பாமகவில் ஏற்கனவே 55 மாவட்ட செயலாளர்கள், 33 மாவட்ட தலைவர்களை மாற்றி புதிய நிர்வாகிகளை ராமதாஸ் நியமித்து உள்ளார். இந்நிலையில், நேற்று தஞ்சை, திருவாரூர் மாவட்டத்துக்கு புதிய செயலாளர்களை நியமித்து பாமக நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளராக தியாகராஜன், திருவாரூர் தெற்கு மாவட்ட செயலாளராக செந்தில்குமார், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவராக செந்தில்குமார், திருவாரூர் தெற்கு மாவட்ட தலைவராக செல்வம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டை நகர இளைஞர் சங்க செயலாளராக பெரமையன், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட துணை செயலாளராக பிரபு ஆகியோரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாவட்ட செயலாளர்கள் மொத்தம் 57 பேரும், மாவட்ட தலைவர்கள் 35 பேரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* இளைஞர் அணிக்கு விரைவில் புதிய தலைவர்
கேள்வி: இளைஞர் அணி தலைவர் பதவி காலியாக இருக்கிறதே?.
பதில்: காலியாக இருக்கிறது. அதற்கு ஒரு பொருத்தமான தலைவர் போடப்படும். இன்னும் நிறைய பொறுப்புகள் காலியாகத்தான் இருக்கிறது. அதுவும் விரைவில் நிரப்பப்படும்.

* பொதுக்குழு, செயற்குழு எப்போது?
கேள்வி: பாமக பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட ஏதேனும் ஏற்பாடு செய்திருக்கிறீர்களா?.

பதில்: அதெல்லாம் முறையாக செய்வோம். இங்கு எவ்வளவு கூட்டம் வருகிறது. நீங்களே பார்க்கிறீர்கள் தானே. என்னை பார்க்கணும் என்று துடிப்போடு வருகிறவர்கள். என்னை பார்ப்பதற்கு யார் வேண்டுமானாலும் இங்கு வரலாம். முன்அனுமதி தேவையில்லை. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 50 பேர், அதிகபட்சமாக 100, 200, 300, 500 இப்படி. இன்னொன்று நான் நேரடியாக இந்த லேண்ட் லைன் போன்ல பேசுவேன். யாரையும் எடுக்க விடுவதில்லை.

அப்படி மக்களோடு மக்களாக நான் பழகி வருகிறேன். இப்ப 86 முடிந்து 87 வயது, ஜூலை 15ல் வரப்போகிறது. அதனால மக்களோடு மக்களாக… மக்களை நான் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்னை தெய்வம், குலதெய்வம் என்று சொன்னாலும்கூட. மக்களை நான் தெய்வங்களாக நேசிக்கிறேன். பேசும்போதுகூட 100 ஆண்டு வாழ, பல்லாண்டு வாழ என என்னிடம் பேசும்போது நானும் வாழ்த்துகளை சொல்கிறேன்.

* ராமதாசுக்கு செக் வைக்க அன்புமணி புதிய வியூகம்
பாமகவில் தந்தை, மகன் மோதல் முற்றியுள்ள நிலையில் நான் இருக்கும் வரையில் மகனுக்கு தலைவர் பதவி கிடையாது என்று ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்து விட்டதால் பாமகவினர் அதிர்ச்சியில் உள்ளனர். இருப்பினும் அன்புமணி ஆதரவு நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்களது பகுதியில் அன்புமணிக்கு ஆதரவாக ஆங்காங்கே பேனர்களை வைத்து வருகின்றனர். அடுத்தடுத்து 10 இடங்களில் பொதுக்குழு கூட்டங்களை நடத்த அன்புமணி சுற்றுப்பயணம் தொடங்கவுள்ள நிலையில் அங்கும் கட்சியினரை தங்கள் பக்கம் வளைப்பதற்கான திரைமறைவு வேலைகளிலும் அன்புமணி தரப்பு இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதிலும் ராமதாசால் புதிதாக நியமிக்கப்படும் நிர்வாகிகளை ரகசியமாக சந்தித்து, அவர்களை வைத்தே ராமதாசுக்கு செக் வைக்கும் புதிய வியூகத்தை அன்புமணி கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் கசிகின்றன. அதாவது நிறுவனர் இன்னும் 2 வருடம் தான் கட்சியை கவனிப்பார்… அதன்பிறகு எல்லாமே அன்புமணி தான்… என அன்புமணி தரப்பில் தகவல் தெரிவித்து, ராமதாஸ் கொடுக்கும் பதவியை வாங்கிக் கொள்ளுங்கள், ஆனால் செயல்படாமல் அமைதியாக இருங்கள் என அறிவுரை வழங்கி வருவதாக தெரிகிறது.

* பனையூரில் அன்புமணியிடம் தஞ்சமடைந்த பாமக பொதுச்செயலாளரை நீக்க ராமதாஸ் முடிவு
தைலாபுரத்தில் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், ‘எங்கள் பொதுச்செயலாளர் எங்கே இருக்கிறார் என்று உங்களுக்குத்தான் தெரியும். நாங்கள் அவரை தேடிக் கொண்டிருக்கிறோம். அவர் விண்ணில் இருக்கிறாரா, தரையில் இருக்கிறாரா, 7 ஸ்டார் ஓட்டலில் இருக்கிறாரா? 5 ஸ்டார் ஓட்டலில் இருக்கிறாரா? பாரின் சரக்கோடு இருக்கிறாரா அல்லது சாதாரண தண்ணீர் குடித்துக் கொண்டு இருக்கிறாரா என்பது தெரியவில்லை. பொதுச்செயலாளரை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.100 பரிசு தருகிறேன்’ என்று அறிவித்திருந்தார்.

அதேநேரத்தில் அன்புமணியை வடிவேல் ராவணன் சந்தித்தது தொடர்பான புகைப்படம் வெளியானது. தந்தை, மகன் மோதல் ஆரம்ப கட்டத்தில் இருந்தபோது, அன்புமணிக்கு ஆதரவாக பேசிய பொருளாளர் திலகபாமா, ‘பாமகவில் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. இதுவரை அய்யா எடுத்த எல்லா முடிவுகளும் சரியே. அய்யாவின் அன்பினை ருசித்தவள் நான். ஆனால் இந்த முடிவு தவறு… அன்புதானே எல்லாம்’ என்று தெரிவித்திருந்தார்.

அப்போது ராமதாசுக்கு ஆதரவாக பதிலடி கொடுத்த பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், ‘திலகபாமா பாமக தோழர் அல்லர். மேட்டுக் குடியினம். உடனிருந்தே கொல்லும் நோய் இவர். அரசியல் என்னவென்றே தெரியாத அரைவேக்காடு. பாட்டாளிகளின் உயிரியக்கமான பா.ம.க.வை அழிப்பதற்காக வெளியில் இருந்து கட்சிக்குள் புகுந்த நோய்க்கிருமி. நெஞ்சிலே கொஞ்சமும் நன்றியுணர்ச்சி இன்றி ராமதாசை வசை பாடி இருக்கும் திலகபாமா உடனடியாக கட்சியிலிருந்து வெளியேறி விடுவதுதான் அவருக்கு நல்லது’ என காட்டமாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அப்படி ராமதாசுக்கு பக்கபலமாக இருந்த வடிவேல் ராவணன் கடந்த சில வாரங்களாக அன்புமணி பக்கம் தாவி அவர் நடத்தும் கூட்டங்களில் கலந்துகொண்டார். தைலாபுரம் வருவதையும் தவிர்த்துவிட்டார். வடிவேல் ராவணன் அன்புமணிக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்ததோடு, அவரிடம் இருந்து காரை பரிசாக பெற்றுள்ளதாக சமூக வலைதளத்தில் படத்துடன் தகவல்கள் பரவின.

அத்தோடு தைலாபுரத்தை கைவிட்டு பனையூரில் வடிவேல் ராவணன் தஞ்சமடைந்து விட்டதாகவும் வெளியான தகவலால் அவரை உடனடியாக பாமகவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மற்றொருவரை புதிதாக அப்பதவிக்கு நியமிக்க ராமதாஸ் முடிவெடுத்து விட்டதாகவும், விரைவில் இதுதொடர்பாக அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால் பாமகவில் அடுத்தகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

* வடிவேல் ராவணன் பதிலடி
பாமக நிறுவனர் ராமதாசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடிவேல் ராவணன், தனது கட்சியினர் சிலருடன் சென்னையில் உள்ள ஒரு சாலையோர ஓட்டலில் பெஞ்சில் அமர்ந்து டீ குடிக்கும் வீடியோ பதிவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அந்த பதிவில், 5 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுச் செயலாளராக இருக்கிறோம். இப்படித்தான் சாலையோரத்து கடைகளில், சாலையோரத்து ஓட்டல்களில் தான் தேநீர் குடிக்கிறோம்… சாப்பிடுகிறோம்… அப்படிப்பட்ட நான் எங்கு போய் ஸ்டார் ஓட்டலில் தங்குவது?.

உண்மையான பட்டாளியாக நாம் இருக்கிறோம். அதற்குரிய வசதியும் கிடையாது, அந்த நினைப்பும் கிடையாது. நாமெல்லாம் பெரியார், அம்பேத்கர் போன்றோரை ஆசான்களாக கொண்டிருக்கிற நாம், இப்படித்தான் எளிய முறையில்தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். எளிய தொண்டனாகவே பட்டாளி மக்கள் கட்சியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நாம் எங்கு போய் பெரிய விடுதிகளில் தங்குவது, பெரிய உணவு முறைகளை நம்ம கையாள்வது, இல்லையே… இப்படியே இந்த கட்சியில் எளிமையாக, தொண்டனாக கடைசிவரை வாழ்ந்து மக்களுக்கு வழிகாட்ட வேண்டும். அதுதான் நம்முடைய நோக்கம் என்று உரையாடல் இடம்பெற்றுள்ளது. வடிவேல் ராவணனின் இந்த பதிலடி புலம்பல் வீடியோ தற்போது பாமக கட்சியின் சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

* கண் கலங்காதீங்க அய்யா… ராமதாசை தேற்றிய சிறுமி
கடந்த 2024 விழுப்புரம் (தனி) தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் முரளிசங்கர் போட்டியிட்டார். தர்மபுரியை சேர்ந்த இவர், தொகுதி மாறி விழுப்புரத்தில் களமிறங்கினார். இத்தேர்தலில் டெபாசிட் இழந்து 3வது இடத்துக்கு முரளிசங்கர் தள்ளப்பட்ட நிலையில் சொந்த ஊருக்கு சென்று கட்சிப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். பாமக மாநில மாணவரணி தலைவரான இவர், தனது மகளுடன் நேற்று தைலாபுரம் வந்து ராமதாசை சந்தித்தார். அவரை தனது அருகில் அழைத்து ராமதாஸ் வாழ்த்தினார்.

ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, விழுப்புரத்தில் போட்டியிட்ட முரளி சங்கரின் மகள் என்னை பார்க்க வந்திருந்தார். அப்போது என்னிடம், நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள் ஐயா… நீங்க தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கும்போது கண் கலங்கியதை பார்த்து எனக்கு அழுக வருது.. உங்களைப் பார்க்கும்போது எனக்கு கவலையாக உள்ளது என்று கூறினார். அந்த குழந்தைக்கு நான் தான் செம்மலர் என்று பெயரிட்டேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

* ராமதாஸ் எடுக்கும் முடிவே இறுதியானது – பொருளாளர் திட்டவட்டம்
திண்டுக்கல் மாவட்ட பாமக மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து மாவட்ட பொதுக்குழு கூட்டத்தை நேற்று திண்டுக்கல்லில் நடத்தியது. இதில் பாமக நிறுவன தலைவர் ராமதாசால் மாநில பொருளாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள சையது மன்சூர் உசேன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாமகவின் அஸ்திவாரம் ராமதாஸ் தான். கட்சி ஆரம்பித்து 36 ஆண்டுகள் ஆகிவிட்டது.

இதுவரை பாமகவில் நீக்குவது, சேர்ப்பது என அனைத்தையும் அவரே முடிவு எடுத்து வருகிறார். ராமதாஸ் எடுக்கும் அனைத்து தீர்மானங்களும், நடவடிக்கைகளும் செல்லும். இதுவரை அப்படித்தான் நடந்துள்ளது. ராமதாஸ் நியமனம் செய்த நபர்கள் மீது அன்புமணி மனக்கசப்புடன் பேசியுள்ளார். கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கருத்து வேறுபாடு உள்ளது. கருத்து வேறுபாடு என்பது இன்று இருக்கும் நாளை போகும். பின்னர், இருவரும் சமாதானம் ஆகிவிடுவார்கள்.

அதேபோல், கட்சியின் விதிகளின்படி ராமதாஸ் எடுக்கும் முடிவுகளே இறுதியானது. ராமதாஸ் இதுவரை 50 முதல் 55 மாவட்ட தலைவர், செயலாளர்களை மாற்றியுள்ளார். இதுவரை பிரச்னை வந்துள்ளதா? இல்லை. இனியும் வராது. திலகபாமா முன்னாள் மாநில பொருளாளர், தற்போது நானே பாமக மாநில பொருளாளராக உள்ளேன். ராமதாஸ் தலைமையில் பாமக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. பிளவு என்ற வார்த்தையே கிடையாது. கூட்டணி குறித்து ராமதாஸ்-அன்புமணி இணைந்து முடிவெடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

The post பாமக நிறுவனரான எனக்கே கட்டளையிட இவர் யார்? மூச்சுக் காற்று நிற்கும் வரை நான் தான் தலைவர்: அன்புமணியை பார்த்தாலே பிபி ஏறுகிறது, ராமதாஸ் மீண்டும் விளாசல் appeared first on Dinakaran.

Related Stories: