திருவள்ளூர் சிறுவன் கடத்தல் வழக்கு பூவை ஜெகன் மூர்த்தியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு, களாம்பாக்கத்தை சேர்ந்தவர் தனுஷ். இவர், தேனியை சேர்ந்த விஜயஸ்ரீ என்பவரை காதலித்து, பதிவு திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள், இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, காதலாக மாறி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு, பெண் வீட்டார் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரத்தில், தனுஷின் 17 வயது தம்பி கடந்த ஜூன் 6ம் தேதி நள்ளிரவில் கடத்தப்பட்டார். இந்த, கடத்தல் தொடர்பாக புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பூவை ஜெகன்மூர்த்தி, போலீஸ் ஏடிஜிபி ஜெயராம் ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முன் ஜாமீன் கோரி பூவை ஜெகன்மூர்த்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது, ஏடிஜிபியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஏடிஜிபி ஜெயராமன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், கைது உத்தரவை ரத்து செய்தும், பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை வேறு அமர்வுக்கு மாற்றியும் உத்தரவிட்டது.
இந்நிலையில், பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை, கடந்த ஜூன் 27ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து, பூவை ஜெகன்மூர்த்தி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான விசாரணையில், பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டதையடுத்து, சிபிசிஐடி போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே, சிறையில் உள்ள விஜயஸ்ரீயின் தந்தை வனராஜா உள்ளிட்ட 5 பேர், ஏடிஜிபி ஜெயராமன் ஆகியோரிடம் போலீசார் விசாரித்த நிலையில் பூஜை ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர். இந்நிலையில், சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு அழைத்ததை தொடர்ந்து, காஞ்சிபுரம் சிபிசிஐடி டிஎஸ்பி வேல்முருகன் முன்பு பூவை ஜெகன்மூர்த்தி நேற்று ஆஜரானார். அவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த, விசாரணையின்போது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை பூஜை ஜெகன்மூர்த்தி மறுத்ததாக கூறப்படுகிறது.

The post திருவள்ளூர் சிறுவன் கடத்தல் வழக்கு பூவை ஜெகன் மூர்த்தியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: