ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தொழில் உரிமம் வழங்குவது தொடர்பாக புதிய விதிமுறைகள்: அரசிதழில் வெளியீடு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தொழில் உரிமம் வழங்குவது தொடர்பாக விதிகளை உருவாக்கி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அரசிதழில் கூறியிருப்பதாவது: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்களின் குடோன்கள், டீக்கடைகள், உணவகங்கள், தங்கும் இடங்கள், திருமண மண்டபங்கள், சிறு அரங்குகள், தனியார் நிறுத்தங்கள் மற்றும் தனியார் இறைச்சி கூடங்கள் என்று தனித் தனியாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் முதலீட்டு தொகையின் அடிப்படையில் நகர்புறங்களை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் 1000 முதல் 50 ஆயிரம் வரையிலும், மற்ற ஊராட்சிகளில் 250 முதல் 35 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வணிக நிறுவனங்களின் குடோன்களுக்கு நகர்புறங்களை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் 700 முதல் 10 ஆயிரம் வரையிலும், மற்ற ஊராட்சிகளில் 500 முதல் 7 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டீக்கடைகள் மற்றும் உணவகளுக்கு 500 முதல் 10 ஆயிரம் வரை, தமிழ்நாடு உணவு விடுதிகள் சட்டத்தின் கீழ் உரிமம் பெற உணவகங்களுக்கு 700 முதல் 3500 ரூபாய், தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் கீழ் வகைபடுத்தப்பட்ட தங்கும் விடுதிகளுக்கு ரூ.2000 முதல் ரூ.30 ஆயிரம், திருமண மண்டபங்களுக்கு ரூ.2000 ஆயிரம் முதல் 30 ஆயிரம், தனியார் நிறுத்தங்களுக்கு 1500 முதல் 18 ஆயிரம் வரை உரிம கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் மூலம் கிராமங்களில் நடைபெறும் வியாபார நடவடிக்கைகள் ஒழுங்குபடுத்தப்பட்டு, பொதுநலத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தொழில் உரிமம் வழங்குவது தொடர்பாக புதிய விதிமுறைகள்: அரசிதழில் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: