விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியனுக்கு ரூ. 34 கோடி: மொத்த பரிசு ரூ. 610 கோடி

லண்டன்: கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு, ரூ. 34 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் உலகளவில் கவுரவம் மிக்க போட்டிகளாக கருதப்படுகிறது. இப்போட்டிகள் வரும் 30ம் தேதி துவங்கி, ஜூலை 13ம் தேதி வரை நடக்கவுள்ள நிலையில், இவற்றில் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கான பரிசுத் தொகை பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு பரிசுத் தொகையை உயர்த்தித் தர வேண்டும் என வீரர், வீராங்கனைகள் வலியுறுத்தி வந்ததை அடுத்து, கடந்த முறை தந்த மொத்த பரிசுத் தொகையை ஒப்பிடுகையில் இந்தாண்டு 7 சதவீத உயர்வுடன் பரிசு வழங்கப்பட உள்ளது. அதன்படி, இந்தாண்டுக்கான மொத்த பரிசுத் தொகை ரூ. 610 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் வீரர், வீராங்கனைக்கு, இந்தாண்டு, தலா ரூ. 34 கோடி பரிசாக கிடைக்கும். இது, கடந்தாண்டை ஒப்பிடுகையில் 11.1 சதவீதம் அதிகம்.

இதன் மூலம், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வழங்கப்படும் அதிகபட்ச பரிசுத் தொகையாக இது அமைந்துள்ளது. இறுதிப் போட்டியில் தோற்று இரண்டாம் இடம் பிடிக்கும் வீரர், வீராங்கனைக்கு, ரூ. 17 கோடி பரிசு கிடைக்கும். இரட்டையர் பிரிவில் வென்று சாம்பியன் பட்டம் பெறுபவர், ரூ. 8 கோடி பரிசுப் பணத்தை தட்டிச் செல்வார். ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் தோற்கும் வீரர், வீராங்கனைக்கு கூட, ரூ. 76 லட்சம் பரிசாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியனுக்கு ரூ. 34 கோடி: மொத்த பரிசு ரூ. 610 கோடி appeared first on Dinakaran.

Related Stories: