குடிமனை பட்டா வழங்க கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பழங்குடியின மக்கள் போராட்டம்

முத்துப்பேட்டை : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை நகரத்தை ஒட்டிய கோவிலூர் பைப்பாஸ் சாலை அருகே உள்ள அரசு புறம்போக்கு இடத்தை பல ஆண்டுகளாக நரிகுறவர்கள் மற்றும் ஆதியன் பழங்குடியின மக்கள் குடிசை அமைத்து வசித்து வந்தனர்.இந்த இடத்திற்கு கடந்த 2005-ம் ஆண்டு அதிமுக அரசால் பட்டா வழங்கப்பட்டது.

அதன் பிறகு மழை மற்றும் வெள்ளக்காலங்களில் மழைநீர் தேங்கி குடியிருப்பை சூழ்ந்துவிட்டதால், மிகவும் தாழ்வாக இருந்த இந்த இடத்தை அந்த மக்கள் லட்சக்கணக்கில் செலவு செய்து தரை மட்டத்தை உயர்த்தி வாழ்ந்து வந்தனர்.

அதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து அப்போதைய அதே அதிமுக அரசின் வருவாய் துறை அதிகாரிகள், தாலுக்கா அலுவலகம், பொது பணித்துறை அலுவலகம் போன்றவைகள் கட்ட அந்த இடத்தை தேர்வு செய்து அங்கு குடியிருந்த 24 குடும்பங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி நம்மங்குறிச்சி சாலையில் தங்கள் குடியிருப்புகளை மாற்றிக் கொள்ளுங்கள் அந்த இடத்திற்கு பட்டா போட்டும், அடிப்படை வசதிகள் செய்து தருகிறோம் என்று கூறினர்.

இதனை நம்பி அந்த மக்களும் அரசு வழங்கிய பட்டாவை திரும்ப அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டு குடியிருப்பை காலி செய்து மாறிக் கொண்டனர். ஆனால் சொன்னபடி இது நாள்வரை இவர்களுக்கு மாற்று இடமும், பட்டாவும் அரசு தரப்பில் வழங்கவில்லை.

இது குறித்து பல முறை அதிகாரியிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை இதனால் விரக்தியடைந்த ஆதியன் பழங்குடியினத்தை சேர்ந்த மக்கள் முத்துப்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களுக்கு குடிமனை பட்டா வழங்கக்கோரி கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்று கொடுத்தனர்.

அந்த மனுவில் தாங்கள் தெற்குகாடு பகுதியில் நீண்ட காலமாக வசித்து வருகிறோம். தங்களுக்கு குடிமனை பட்டா கேட்டு பல வருடங்களாக போராடி வருகிறோம்
ஆனால், இதுவரை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, உடனடியாக தங்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் தெரிவித்தனர்.

The post குடிமனை பட்டா வழங்க கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பழங்குடியின மக்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: