தூய்மைப்பணியாளர் நலவாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி பழங்குடியினர் நல வாரிய தலைவராக கா.கனிமொழி நியமனம்: தமிழக அரசு உத்தரவு


சென்னை: தூய்மைப்பணியாளர் நல வாரியத்தின் தலைவராக திப்பம்பட்டி ஆறுச்சாமி மற்றும் பழங்குடியினர் நல வாரியத்தின் தலைவராக கா.கனிமொழியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் லட்சுமி பிரியா நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தூய்மைப்பணியாளர் நல வாரியம் மற்றும் பழங்குடியினர் நல வாரியத்தின் கீழ் ஆயிரக்கணக்கான நபர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு, அவர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கென மருத்துவ உதவிகள், கல்வி உதவிகள், ஈமச்சடங்கு நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் தலைமையில், ஆய்வு கூட்டங்கள் அவ்வப்போது நடத்தப்பட்டு, வாரியங்கள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 2 நல வாரியங்களின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை சீரான இடைவெளிகளில் ஆய்வு செய்து, திட்டங்களானது நல வாரிய உறுப்பினர்களுக்கு சென்று சேர்வதை உறுதி செய்திடவும், திட்டங்கள் குறித்து அவ்வப்போது கள ஆய்வு செய்திட ஏதுவாகவும், தற்போது தூய்மைப்பணியாளர் நல வாரியத்திற்கு டாக்டர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமியை தலைவராகவும் மற்றும் பழங்குடியினர் நல வாரியத்திற்கு கா.கனிமொழியை தலைவராகவும், நியமனம் செய்து அரசு ஆணையிட்டுள்ளது. மேலும், புதிதாக நியமனம் செய்யப்பட்ட தலைவர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post தூய்மைப்பணியாளர் நலவாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி பழங்குடியினர் நல வாரிய தலைவராக கா.கனிமொழி நியமனம்: தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: