பாழடைந்து கிடக்கும் கூனிச்சம்பட்டு அரசு பள்ளி

*அசம்பாவிதம் நிகழும் முன் சீரமைக்க கோரிக்கை

புதுச்சேரி : திருக்கனூர் அருகே உள்ள கூனிச்சம்பட்டில் அறிஞர் அண்ணா அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு மாடி கட்டிடங்கள் கட்டப்பட்டு தற்போது இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுற்றியுள்ள தமிழக மற்றும் புதுச்சேரி கிராம மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

மேலும் திருக்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளி தற்போது புதிய பள்ளி கட்டுமான பணி நடைபெறுவதால் அந்தப் பள்ளி மாணவர்களும் இப்பள்ளியின் ஒரு பகுதியில் படித்து வருகின்றனர். சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர்.

ஆனால் இப்பள்ளி பாழடைந்து உள்ள சூழ்நிலையில் தற்போது பள்ளியின் தளம் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் அளவிலும் உள்ளது. ஒரு சில வகுப்பறைகளுக்கு மட்டுமே மின்விசிறி வசதி உள்ளது. பல வகுப்பறை மாணவ, மாணவிகள் மின்விசிறி வசதி இல்லாமல் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் பள்ளியின் வெளிப்புறத்தில் ஜன்னல்கள் உடைந்தும் மேலே உள்ள தளத்தில் அரசமரம் வளர்ந்தும் பாழடைந்த மண்டபம் போல் காணப்படுகிறது. இதனால் ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புற பள்ளி என்று அலட்சியப்படுத்தாமல், அரசு விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பாழடைந்து கிடக்கும் கூனிச்சம்பட்டு அரசு பள்ளி appeared first on Dinakaran.

Related Stories: