* நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் வளர்ச்சி பெறும்
திருமயம்: அறந்தாங்கி-பொன்னமராவதி இடையே கே.புதுப்பட்டி, அரிமளம், செங்கீரை வழியாக அரசு பஸ் இயக்கி, இப்பகுதிகளின் 20 ஆண்டுகால எதிர்பார்ப்பை அரசும், போக்குவரத்துக்கழகமும் நிறைவேற்ற வேண்டும். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, பொன்னமராவதி மாவட்டத்தில் உள்ள அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டு பெரிய நகரங்களாகும். இதனிடையே, பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவு விவசாய பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது, பொன்னமராவதி-அறந்தாங்கி பேருந்து சேவை: அறந்தாங்கி பகுதியில் விவசாயத்துடன், கடல் சார்ந்த உணவுப் பொருட்கள் அதிக அளவு தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொன்னமராவதி, அறந்தாங்கியை நேரடியாக இணைக்கும் வகையில் இதுவரை அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து இயக்கப்படவில்லை.
இந்நிலையில், இரண்டு பகுதிகளைச் சேர்ந்த மக்களும் புதுக்கோட்டை சென்று, பிறகு சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது. 10 கி.மீ.,தூரம் பயண் குறையும்: அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டை வழியாக பொன்னமராவதி செல்ல 75 கிலோ மீட்டர் தொலைவு பயணம் தூரமாகும். ஆனால், அறந்தாங்கியில் இருந்து கே. புதுப்பட்டி, அரிமளம், செங்கீரை, லெம்பலக்குடி, விராச்சிலை, பனையப்பட்டி, குழிபிறை வழியாக பொன்னமராவதிக்கு நேரடியாக செல்லும்போது 10 கிலோ மீட்டர் பயணம் குறைகிறது. மேலும், இதனால், அறந்தாங்கி மட்டுமல்லாது; கே.புதுப்பட்டி, அரிமளம், செங்கீரை, ராயவரம், தேக்காட்டூர், லெம்பலக்குடி, பனையப்பட்டி, குழிபிறை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைய வாய்ப்புள்ளது.
தரமான சாலை வசதி: அறந்தாங்கியில் இருந்து மேலே குறிப்பிட்ட வழியாக பொன்னமராவதி செல்லும் சாலை தரமானதாக உள்ளது. எனவே, இந்த புதிய வழித்தடத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்களை இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த வழித்தடத்தில் பஸ் இயக்கினால் அரிமளம், திருமயம் பகுதியில் உள்ள பல கிராமங்கள் கல்வி, வேலைவாய்ப்பு, வியாபாரம் உள்ளிட்ட பல துறைகளில் வளர்ச்சி அடையும். எனவே, அப்பகுதி மக்களின் நலன் கருதி அறந்தாங்கியில் இருந்து பொன்னமராவதிக்கு அரிமளம், செங்கீரை, லெம்பலக்குடி வழியாக புதிய வழித்தடத்தில் நேரடி பஸ் போக்குவரத்தை தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
20 ஆண்டுகால கோரிக்கை: இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், அறந்தாங்கியில் இருந்து அரிமளம், செங்கீரை, லெம்பலக்குடி வழியாக பொன்னமராவதி செல்லும் சாலை மாவட்டத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த சாலையில் ஒன்று. எனவே, இந்த சாலையில் அரசு சார்பில் பொது போக்குவரத்து சேவை தொடங்க கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதி மக்களை திரட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் சம்பந்தப்பட்ட பகுதி கிராம மக்கள் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றதோடு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுக்களும் கொடுக்கப்பட்டன. ஆனால், அதிகாரிகள் இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த இரு நகரங்களுக்கு இடையே நேரடி பஸ் போக்குவரத்து தொடங்குவதன் மூலம் அறந்தாங்கி, பொன்னமராவதி பகுதி மக்கள் மட்டுமல்லாது இடைப்பட்ட கிராமங்களான பல குக்கிராம மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
அதிகாரிகள் வாக்குறுதி: இதனிடையே, கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் சம்பந்தப்பட்ட சாலையில் பஸ் போக்குவரத்து இயக்காததை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு செய்து நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதனை அறிந்த அதிகாரிகள் அப்பகுதி பொதுமக்களிடம் சமாதானம் பேசினர். அப்போது மக்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என தெரிவித்தனர். ஆனால் இதுநாள் வரை பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அறந்தாங்கியில் இருந்து அரிமளம், செங்கீரை, லெம்பலக்குடி வழியாக பொன்னமராவதிக்கு புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்து தொடங்க காலம் தாழ்த்தினால் மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.
The post விவசாயிகள், கடல் உணவு வியாபாரிகள் பயன்பெற அறந்தாங்கி-பொன்னமராவதியை நேரடியாக இணைக்க அரசு, தனியார் பேருந்து சேவை: 10 கி.மீ., தூர குறைவதால் பயணம் இனிதாகும் appeared first on Dinakaran.