ஊத்துக்கோட்டை, ஏப்.28: தாமரைப்பாக்கம் அணைக்கட்டு அருகே, கொசஸ்தலை ஆற்றின் தடுப்பணை நடுவில் ஏற்பட்டுள்ள மெகா சைஸ் பள்ளத்தால் பாலம் பலவீனமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. பெரியபாளையம் அருகே, தாமரைப்பாக்கம் பகுதியில் கடந்த வருடம் மிக்ஜாம் புயல் காரணமாக மழை பெய்து ஆறு, ஏரிகளில் தண்ணீர் நிரம்பி காணப்பட்டது. இந்நிலையில், கடந்த வருடம் டிசம்பர் மாதம் பூண்டி ஏரியில் இருந்து முதலில் 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர், படிப்படியாக உயர்த்தி வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் ஆற்றின் கரைகள் இருபுறமும் சேதமடைந்துள்ளது. பின்னர் தடுப்பணை பகுதியில் கான்கிரிட் சிமெண்ட்டால் போடப்பட்ட தரைப்பகுதி சேதமடைந்து மெகா சைஸ் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தாமரைப்பாக்கம் அணைக்கட்டு கொசஸ்தலை ஆற்றில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதிமுக ஆட்சி காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கரைகள் சேதமடைந்தது. இதனை சீரமைக்க அப்போதைய முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் ரூ.1 கோடி நிதி ஒதுக்கினார். பின்னர், ஆற்றின் கரைகள் சீரமைக்கப்பட்டது. அதன்பிறகு, கடந்த வருடம் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த மழையால் பூண்டி ஏரியில் கடந்த டிசம்பர் மாதம் 40 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்
பட்டது.
இதனால், தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் கரைகள் மற்றும் சிமெண்ட் கான்கிரீட்டுகள் உடைந்து மெகா சைஸ் பள்ளம் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. வரும் காலத்திற்குள் கரைகள் மற்றும் கான்கிரீட்டை சீரமைக்க வேண்டும், இல்லாவிட்டால், ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் பலவீனமாகும் அபாயம் ஏற்படும் என்றனர்.
The post தாமரைப்பாக்கம் தடுப்பணையில் அச்சுறுத்தும் மெகா சைஸ் பள்ளம்: விரைந்து சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.