கோடை வெயில் எதிரொலியால் எலுமிச்சை விலை கிடுகிடு உயர்வு

 

திருத்தணி, ஏப்.28: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் ரயில்வே கோடூர், ராஜம்பேட்டை பகுதிகளில் எலுமிச்சை சாகுபடி அதிகளவில் செய்யப்படுகிறது. அங்கிருந்து சென்னை, திருத்தணி, திருவள்ளூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு லாரிகளில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. குளிர்ச்சி நிறைந்த எலுமிச்சை ஜூஸ் கோடை வெயிலுக்கு உடல் வெப்பத்தை தணித்து, குளிர்ச்சியாக வைத்திருக்கும் என்பதால், பெரும்பாலானோர் எலுமிச்சை பழம் வாங்கிச்சென்று ஜூஸ் போட்டு குடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இருப்பினும், கோடையில் வெயில் வாட்டி வதைத்து வருவதால், எலுமிச்சை மகசூல் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், மார்க்கெட்டுக்கு வரும் எலுமிச்சை குறைந்துள்ளதால், விலை அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் வரை பெரிய சைஸ் எலுமிச்சை ரூ.7க்கும், சிறிய சைஸ் ரூ.5க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. சென்னை கோயம்பேடு, திருத்தணி மார்க்கெட்டுகளில் நேற்று சில்லறையில் பெரிய சைஸ் எலுமிச்சை ரூ.10க்கும், சிறிய சைஸ் ரூ.7க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை உயர்வு குறித்து எலுமிச்சை வியாபாரி ரகுபதி கூறுகையில், கடந்த வாரம் வரை எலுமிச்சை பழம் மார்க்கெட்டில் கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டு வந்ததால், சில்லறையில் பெரிய சைஸ் பழம் ரூ.5, சிறிய சைஸ் பழம் ரூ.3க்கு விற்பனை செய்து வந்தோம். இந்த வாரம் ஆந்திராவில் மகசூல் வெகுவாக குறைந்து பழம் வரத்து குறைந்துள்ளதால், மொத்த விற்பனையில் முதல் ரகம் கிலோ ரூ.160க்கும், சன்னரகம் ரூ.140க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், எலுமிச்சம் பழம் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. கோடை காலம் முடியும் வரை மேலும் 2 மாதங்களுக்கு விலை குறைய வாய்பில்லை என்றார்.

The post கோடை வெயில் எதிரொலியால் எலுமிச்சை விலை கிடுகிடு உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: